Breaking News

முள்ளிவாய்க்காலை நேற்றோடு மறந்து விடுவோமா?



தமிழ் ஈழ மக்கள் மாத்திரமின்றிஇந்த உலகமே இந்த நூற்றாண்டில் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. அதன் அடையாளமும் வீச்சும் உலகில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் நடந்த நினைவு நிகழ்ச்சிகளில் எல்லாம் சர்வதேச அரசியல் தலைவர்கள்சிலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் கொடூரத்தைப் பேசியிருக்கிறார்கள். உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது ஆறுதல் அளிப்பது ஆகும். அதற்கேற்ப நாமும் நடக்கிறோமா?

ஆனால் இந்த இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஈழ மக்களாகிய நாம் இதனை ஒரு சம்பிரதாய பூர்வமான நிகழ்வாக கடந்து செல்ல பழகுகிறோமா? என்ற ஐயம் குறித்து இப் பத்தி ஆராய விரும்புகிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது அதன் நாட்களில் மாத்திரம் நினைவுகூருகிற ஒரு சம்பிரதாய நிகழ்வல்ல. அது நீதியும் நியாயமும் பலனும் வேண்டிய போராட்டம். ஆனால் கடந்த சில நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவு நாளை கொண்டாடிய பலர் இப்போது வேறுகொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

தாயகத்தைப் பொறுத்தவரையில் முள்ளிவாய்க்கால்நினைவு நிகழ்வுகள் பல இடங்களில் நடத்தப்பட்டன. இதில் தனிப்பட்ட செல்வாக்குகளை நிலை நிறுத்துதல், தமது தலைமையை முன்னிலைப்படுத்தல், பிரதேச ரீதியான அரசியல் நோக்கம் போன்ற பல்வேறு நோக்கங்களே பின்னால் இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுக்கொரு இடத்தில் அஞ்சலி செலுத்தாமல் அனைவரும் ஓரிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம் என்ற கருத்தை பலரும் முன் வைத்தார்கள். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சில அரசியல் தலைவர்கள் அடுத்த வருடத்திற்கிடையில் முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைப்போம் என்றனர். ஆனால் இந்த வருடம் வெறும் கையை வீசிக் கொண்டு வந்தனர். தேர்தல்கள் முடிந்துவிட்டதுதான் காரணமா? முள்ளிவாய்காலை வைத்து உங்கள் போலி அரசியல் செய்வதையும் போலி வாக்குறுதி கொடுப்பதையும் நிறுத்துங்கள். அது அதற்கான இடமல்ல. அதற்காக இலட்சம் மக்கள் தம் உயிர்களை இழக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு அனைவரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது ஒரு அரசியல்வாதி கைபேசியில்விளையாடிக் கொண்டிருப்பதை புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். முள்ளிவாய்க்காலுக்கு உண்மையாக இருப்பவர்களால் இப்படி நடந்து கொள்ள முடியாது. முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்பவர்களினால்தான் இப்படி நடந்துகொள்ள முடியும்.

இதேவேளை முள்ளிவாய்க்கால்நினைவு நிகழ்வை சரியாக ஒழுங்கமைக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் அங்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மிக மிக அவசரமாகவே இறுதிநாட்களில் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. தமிழர்களின் வாழ்வில் சந்தித்த முக்கியமானதொரு நிகழ்வை அவசர அவசரமாக செய்யும் அளவில் எதனை செய்து கிழித்தோம்?

முள்ளிவாய்காலை வெறுமனே நினைவுகூருகிற சடங்காக மாற்றினால் கொல்லப்பட்ட மக்களுக்கு அதைவிடவும் பாரிய துரோகத்தை ஆற்ற முடியாது. முள்ளிவாய்க்கால் ஒரு ஆயுதம். நீதியை வெல்ல வேண்டிய ஆயுதம். அதனை அந்த நாட்களில் மாத்திரம் நினைவுகூருதல் முறையல்ல. முள்ளிவாய்க்கால் அனைத்திற்கும் அடிப்படை.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலி என்பது அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதே. இனப்படுகொலைக்கு நீதியைக் காண்பதே. அதற்கு அந்த நாட்களில் வெறுமனே நினைவுகூருதல் மாத்திரம் போதாது. அது அரசியல்வாதிகளின் வெறும் நிகழ்வாக இருக்கவும் முடியாது. அது தமிழ் ஈழ மக்களின் எழுச்சியாக இருக்க வேண்டும்.