ராஜபக்சே போல ஊழலின் அடையாளமே ஜெயலலிதா தான்: ராமதாஸ் சாடல் - THAMILKINGDOM ராஜபக்சே போல ஊழலின் அடையாளமே ஜெயலலிதா தான்: ராமதாஸ் சாடல் - THAMILKINGDOM
 • Latest News

  ராஜபக்சே போல ஊழலின் அடையாளமே ஜெயலலிதா தான்: ராமதாஸ் சாடல்  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியமே ஊழலை 1000 மடங்கு அளவுக்கு உயர்த்துவதே என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளர்.

  இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

  தமிழக சட்டசபைத் தேர்தலில் பணபலத்தின் உதவியுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஆட்சி எப்படி மாறவில்லையோ, அதேபோல் காட்சியும் மாறவில்லை. கடந்த ஆட்சியில் கோலோச்சிய ஊழல் அமைச்சர்களும், ஊழல் அதிகாரிகளும் தான் இந்த ஆட்சியிலும் அதிகாரம் செலுத்துகின்றனர். இவர்களால் தமிழகத்தை சீரழிக்க முடியுமே தவிர முன்னேற்ற முடியாது.

  தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக அதிக ஊழல் நடைபெற்ற ஆட்சி என்றால் அது 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி தான். ஐந்தாண்டு காலத்தில் ஊழல் மூலம் குவித்த பணத்தில் அரை விழுக்காட்டை வாக்காளர்களுக்கு அள்ளிக் கொடுத்து தான் இம்முறை அதிமுக வென்றுள்ளது.

  ஊழலே ஒரு முறைகேடு, அந்த ஊழல் பணத்திலும் முறைகேடு செய்து, மேலிடத்திற்கு துரோகம் இழைத்ததற்காக 5 அமைச்சர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதும், அவர்களின் வீடுகளில் மேலிடத்திலிருந்து அனுப்பப்பட்ட படையினர் நடத்திய அதிரடி ஆய்வில் அவர்கள் சேர்த்து வைத்திருந்த ரூ.30,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிக்கப்பட்டதும் வரலாறு.

  இவ்வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான 5 அமைச்சர்களில் இருவர் வீழ்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள மூவரில் இருவர் மீண்டும் அமைச்சர்களாக்கப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ள ஒருவரும் அமைச்சராக முயற்சி செய்கிறார். வீழ்த்தப்பட்ட இருவரில் ஒருவர் இடைத்தேர்தலில் வென்று அமைச்சராக துடித்துக் கொண்டிருக்கிறார்.

  சர்வாதிகாரத்தின் அடையாளமாக ஹிட்லரும், இனப்படுகொலையின் அடையாளமாக ராஜபக்சேவும் உருவகப்படுத்தப்படுவது போல, ஊழலின் அடையாளமாக இந்தியாவில் உருவகப்படுத்தப்படுபவர் ஜெயலலிதா தான்.

  ஊழலுக்காக முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவலத்திற்கும், இரு முறை சிறை சென்ற அவலத்திற்கும் ஆளானவர் அவர் தான். ஊழலின் பரிணாம வளர்ச்சிக்கு உதாரணம் அவரது ஆட்சி தான்.

  முதல் முறை ஆட்சியை விட இரண்டாம் முறை ஆட்சியில் 10 மடங்கு அதிக ஊழலை செய்த அவர் மூன்றாம் முறை ஆட்சியில் 100 மடங்கு அதிக ஊழலை செய்தார். இம்முறை ஊழலை 1000 மடங்கு என்ற அளவுக்கு உயர்த்துவது தான் ஜெயலலிதாவின் லட்சியமாக இருக்கும்.

  ஊழலின் உச்சம் என்ற இலக்கை எட்டுவதற்காகத் தான் ஊழல் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களை மீண்டும் அமைச்சர்களாக்கியிருக்கிறார். ஔரங்கசீப்பின் அமைச்சரவையில் கொடுமைக்காரர்களுக்குத் தான் இடம் கிடைக்கும் என்பதைப் போல ஊழலின் ஒட்டுமொத்த உருவமான ஜெயலலிதா அமைச்சரவையில் இவர்கள் இடம் பெற்றதில் வியப்பேதுமில்லை.

  இந்த அமைச்சர்களை வைத்துக் கொண்டு தான் ஊழலற்ற ஆட்சியைத் தரப்போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பதற்கும், இந்த அமைச்சர்களை வைத்துக் கொண்டு ஊழலற்ற ஆட்சி தரப்போவதாக மிகப்பெரிய ஊழல்வாதி ஜெயலலிதா கூறுவதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

  அதிகாரிகள் நியமனத்திலும் நல்லவர்கள் மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்களுக்கு இடமில்லை. நேர்மையான அதிகாரிகள் என்று போற்றப்படும் இறையன்பு, எஸ்.கே. பிரபாகர், சகாயம், சுப்ரியா சாகு, பி.அமுதா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பணி வழங்கப்படாமல், தண்டனை பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சக்திகாந்த தாஸ், டி.ஜேக்கப், லீனா நாயர், பிரஜ்கிஷோர் பிரசாத் உள்ளிட்ட நேர்மையும், நிர்வாகத்திறமையும் மிக்க அதிகாரிகள் மாநில அரசின் நெருக்கடியை தாங்க முடியாமல் மத்திய அரசு பணிக்கு சென்று விட்டனர்.

  மாறாக ஊழலுக்கு துணை நிற்கும், ஊழலில் பங்கேற்கும், ஊழலின் தடயத்தை மறைக்கக் கூடிய அதிகாரிகளுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர்கள், அரசு ஆலோசகர் என முதன்மை பணிகளை வகிப்பவர்கள் அனைவரும் ஊழலுக்கு உறுதுணையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் தான்.

  பணியில் இருந்த காலத்தில் ஆட்சியாளர்களின் அனைத்து ஊழல்களுக்கும் உடந்தையாகவும், உதவியாகவும் இருந்தவர்களுக்கு பணிக்காலம் முடிந்தும் பணி நீட்டிப்பும் புதிய பதவிகளும் வழங்கப் பட்டன. முதல்வரின் இரு செயலர்கள், அரசு ஆலோசகர், அரசு ஆலோசகராக இருந்து தலைமைத் தகவல் ஆணையாளராக நியமிக்கப்பட்டவர் ஆகியோர் இதற்கான உதாரணங்களில் சிலர் ஆவர்.

  5 ஆண்டு காலம் தங்கு தடையின்றி ஊழல் செய்த ஜெயலலிதாவும், அவரது அமைச்சர்களும், தேர்தல் காலத்தில் ஊழல் மூலம் குவித்த பணத்தை வாக்காளர்களுக்குக் கொடுத்துவாக்குகளை விலைக்கு வாங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  இப்போது ஜெயலலிதா என்ற ஊழல்மீண்டும் கோலோச்சத் தொடங்கியுள்ளது. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ரூ.10,000 கோடி செலவழித்துள்ள நிலையில், அந்த முதலீட்டையும் சேர்த்து எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்அரசு காரியங்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

  பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான வெகுமதி தொடங்கி பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் வரை அனைத்துக்கும் புதிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டு, அதற்கானப் பேச்சு தொடங்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர்.

  அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதும், பொது சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதும் தவிர்க்க முடியாதவை ஆகும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறிதளவாவது அக்கறை இருந்தால் சட்டசபையின் முதல் கூட்டத் தொடரிலேயே இவற்றுக்கான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ராஜபக்சே போல ஊழலின் அடையாளமே ஜெயலலிதா தான்: ராமதாஸ் சாடல் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top