வட மாகாணம் முன்மொழிந்த தனியலகு எமக்கு வேண்டாம்!
மலையக தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் தனியாட்சிப் பிரதேசம் வேண்டாம் என கிராமிய அடிப்படை வசதிகள் மற்றும் பிரஜைகள் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பு யோசனையில், மலையக தமிழ் மக்களுக்கு “ மலையக கவுன்ஸில்” எனும் பெயரில் தனியான ஆட்சிப் பிரதேசம் ஒன்றை பிரேரித்துள்ளமைக்கு வட மாகாண சபைக்கு நன்றிகள். இருப்பினும், தனியாட்சி கேட்கும் தேவை மலையக மக்களுக்கு இல்லையெனவும் இன்றைய சிங்கள தேசிய நாளிதழொன்றுக்கு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் தமிழ் மக்கள் தனியாக வாழ்வது உண்மை. இதனால், அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து கலந்துரையாடி மாற்றமான தீர்மானங்களுக்கு வர வேண்டியுள்ளனர். இருப்பினும், நுவரெலியா, பதுளை, களுத்தறை, கண்டி உட்பட தெற்கிலும் பெரும்பாலான பிரதேசங்களிலும் சிங்கள மற்றும் ஏனைய இனங்களுடன் இணைந்தே தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.
இதனால், தனியான ஆட்சிப் பிரதேசம் கேட்கும் யோசனை பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.








