Breaking News

குற்றச்சாட்டுக்களை இராணுவம் ஏற்காது வெளிப்படையாக தெரிவித்தார் சந்திரிகா

கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் மற்றும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை இராணுவத்தினர் தாமாகவே முன்வந்து ஏற்று விசாரணை செய்வார்கள் என தான் ஒரு போதும் நம்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.


தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க காரியாலயத்தின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொழும்பில் நேற்று நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த போது இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடும் யுத்தம் நடைபெற்ற தென்னாபிரிக்காவில் குற்றம் இழைத்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டனர். எனினும் இலங்கையில் அவ்வாறு நடைபெற வாய்ப்பில்லை.

ஏனெனில் இலங்கையின் பாரம்பரியம், அரசியல் கலாசாரம், மற்றும் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் குற்றம் இழைத்தவர்கள் தாமாக முன்வந்து தமது குற்றங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

மறுபக்கத்தில் யுத்தத்தினால் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கு பல் வேறுபட்ட விடயங்கள் அவசியமாக உள்ளன. இதனடிப்படையில் காணாமல் போனோர்களின் உறவினர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் நிவாரணங்களை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

நீதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து இந்த சான்றிதழை வழங்கும் நட வடிக்கையை அரசாங்கமும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க காரியலாயமும் செயற் திறன்மிக்க வகையில் முன்னெடுத்து வருகிறது.

காணாமல்போன இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்கள், காணாமல்போன பொது மக்களின் குடும்பங்கள் உள்ளிட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இந்த சான்றிதழ் உதவியாக அமையும்.

முரண்பாடுகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்கும் வகையில் அடுத்த கட்டமாக மரண சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை எடுத்துக் கொள்ளும்போது, மரண சான்றிதழ் வழங்கப்படாவிடின் அவர்களின் உறவினர்கள் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியாது என சந்திரிகா பண்டாரநாயக்க சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது வழங்கப்படவுள்ள காணாமல் போனமை  தொடர்பிலான சான்றிதழை, சமூக நலத் திட்டங்களின் கீழான சலுகைகளைப் பெறுவதற்கு உறவினர்கள் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்