கூட்டமைப்பே, நல்லாட்சி அரசை இயக்குகிறதாம்!
‘நல்லாட்சியினை உருவாக்கி அரசாங்கத்தினை ஏதோவொரு வகையில் இயக்குபவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் இருக்கின்றோம்’ என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சும் கிழக்கு விவசாய திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த நிலக்கடலை அறுவடை விழாவும் இயந்திர பாவனை அறிமும் நேற்று (புதன்கிழமை) ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடியோடை புத்தம்புரி பகுதியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பளர் ஆர்.கோகுலதாஸன் உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய துரைராஜசிங்கம் குறிப்பிடுகையில், ‘எமது வளங்களை சுரண்டிக்கொண்டு மிகப்பெரும் பணக்காரர்களாக மாறும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. இவையெல்லாம் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்று வருகின்றன.
மாவடியோடை ஆற்றுப் பகுதியில் சட்ட விரோதமான மணல் அகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இரு வாரங்களுக்கு முன்னர் கிரானில் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்ட மரங்களை தடுத்ததற்காக சட்டம் ஒழுங்கை பேணவேண்டியவர்களினால் கிராம சேவையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
யுத்தம் ஒய்ந்ததன் பின்னர் எமது வளங்களை திருடும் செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இயற்கை வளங்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் நாங்கள் உள்ளோம். விவசாய மாகாணமாகவுள்ள கிழக்கில் அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டியது விவசாயிகளின் பொறுப்பாகும்.
எமது பிரதேசங்களில் வளங்களோடு சேர்த்து தமிழ் பேசும் மக்களின் உரிமைகளும் சுரண்டப்படும் நிலையே காணப்படுகின்றது. ஆனால் வடகிழக்கின் தனித்துவத்தினை பாதுகாக்க வேண்டியது தமிழ் பேசும் மக்களின் கடமையாகும்.
இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் குடியேற்றங்கள் மூலம் எமது மண் கபளீகரம் செய்யப்பட்டது. தனிச் சிங்கள சட்டத்தின் மூலம் எமது மொழி பாவனை கட்டுப்படுத்தப்பட்டது. தமிழ் மொழியை முற்றாக ஒதுக்குவதற்கு தினச் சிங்களம் சட்டம் முயன்றது.
தரப்படுத்தல் என்னும் நடைமுறை மூலம் தமிழ் இளைஞர்களின் கல்வியை குழப்பியது. இதன் காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து நெருப்பாறுகளை நீந்தி இன்று நல்லாட்சியினை உருவாக்கி அந்த அரசாங்கத்தினை ஏதோவொரு வகையிலே இயக்குபவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் இருக்கின்றோம்.
இந்த பிரதேசத்தில் எங்கள் தனித்துவத்தினையும் மொழியையும் மண்ணையும் காப்பாற்றவேண்டியது மிகமிக முக்கியமான விடயம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.’ என்றும் கூறினார்.








