Breaking News

பான் கீ மூன் ஒத்து ஊதுகிறார்: அனந்தி

இலங்கைக்கு இன்று புதன்கிழமை இரவு வருகைதரவுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்து ஊதுபவராகவே உள்ளார்' என, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இரண்டாவது தடவையாக இன்று விஜயம் செய்யவிருக்கின்ற, பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதை ஊக்கப்படுத்துவதற்கு, பான் கீ மூன் விரும்பவில்லை. அவர், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்குத் தயாரில்லை. முக்கியமான நபர்கள் இங்கு வரும் போது, அவர்களுடன் அரசாங்கமே சந்திப்புக்களை மேற்கொள்ள வைக்கின்றது. இறுதி யுத்தம் நடைபெற்றபோது, மேலால் பறந்து சென்று பார்வையிட்ட பான் கீ மூன், யுத்தத்தை நிறுத்த எத்தனிக்கவில்லை. நினைத்திருந்தால், அவரால் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். 

பான் கீ மூன், சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும் அத்துடன், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும்' இதனை வலியுறுத்தி, நாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளளோம்' என்றார். இன்று புதன்கிழமை, இலங்கைக்கு வரும் பான் கீ மூனின் விஜயத்தின் போதான நிகழ்ச்சி நிரலை அரசாங்கமே தயாரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கும் மூன், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். 

யாழ்ப்பாணத்துக்கு 2ஆம் திகதியன்றே வரும் அவர், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். அதன் போதே கூட்டமைப்பு உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார். வழமையாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை, வெளிநாட்டு பிரதிநிதிகள் கொழும்பில் வைத்துச் சந்தித்து வரும் நிலையில், இம்முறை இலங்கைக்கு வரும் பான் கீ மூன், யாழ்ப்பாணத்தில் சந்திக்கின்றார். 

இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பது குறித்து பான் கீ மூனின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருப்பதாத்க தகவல் இல்லை. அரசாங்கத்தின் அழைப்பின் இந்த இலங்கை விஜயம் அமைகின்றமையால் அவரது பயண அட்டவணையும் அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்புகளில் கலந்துகொள்ளும் மூன், தொடர்ந்து மீள் குடியேற்றப் பகுதிகளுக்கும் செல்வார் என்றும் இறுதியில் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டொன்றையும் நடத்துவார் என்றும் கூறப்படுகின்றது.