Breaking News

கிநொச்சியில் பதட்டம்..!! (படங்கள் இணைப்பு)



கிளிநொச்சி நகரில் பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் கிளிநொச்சி நகரில் பெரும்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவத்தை கண்டித்து இன்றையதினம் கிளிநொச்சி உட்பட வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையிலேயே பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கின்றது.

ஹர்த்தால் இடம்பெற்றுவரும் நிலையில் மிகவும் அமைதியாக இருந்த கிளிநொச்சி நகரில் பொலிசார், விசேட அதிரடிப்படையினர், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிசாரின் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து, ஆத்திரமடைந்த மக்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அருகில் படையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த கலகம் அடக்கும் பொலிசார் உட்பட படையினர் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு பணித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசார் மீது மக்கள் கற்களையும், கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இதனையடுத்து படையினரும் மக்கள் மீது தடியடிப்பிரயோகம் நடத்தியதுடன், கையில் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கொண்ட தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் டிப்போ சந்திக்கும் இடையேயான பகுதி யுத்தகளமாக காட்சி அளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை பொலிசாரின் டயர்களை கொளுத்தி பொது மக்கள் படையினருக்கு எதிராக போராட்டங்களை தொடர்கின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது