Breaking News

புதிய கட்சியின் தலைமையை மகிந்த ஏற்றுக்கொள்ளுவார் – பசில் அறிவிப்பு



பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

பத்தரமுல்லையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் அரசியல் செயலகத்தில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட பசில் ராஜபக்ச, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது உறுப்பினராக தாம் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தனது, கட்சி உறுப்பினர் அட்டையையும் அவர் காண்பித்தார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுக் கொள்வதாகவும், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தாம் தயாராக இருப்பதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும் கடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட தோல்விக்கும் தாமே பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணி மகிந்த ராஜபக்சவின் அரசியல் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கட்சிக்கு அவர் தலைமை தாங்குவார் என்றும் பசில் ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்தார்.