Breaking News

மீண்டும் உயிர்த்தெழுந்த மாவீரர் துயிலுமில்லங்கள்



தமிழீழத் தேசிய மாவீரர் நாளான நேற்று, தமிழர் தாயகத்தில், இராணுவ
ஆக்கிரமிப்பில் இல்லாத துயிலுமில்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றுமாலை உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு நினைவுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், தமிழர் தாயகத்தில் முதல் முறையாக ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று மாலை துயிலுமில்லங்களில் ஒன்றுகூடினர்.

மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்களின் கண்ணீரும், கதறலும், துயிலுமில்லங்களில் எதிரொலித்தன.

மலர் மாலைகள், தீபங்கள் மற்றும் உணவுப் பொருட்களையும் எடுத்து வந்து மாவீரர்களுக்கு குடும்பத்தினர் வணக்கம் செலுத்தினர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் துயிலுமில்லத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும், முழங்காவில் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும், யாழ்.மாவட்டத்தில் உள்ள உடுத்துறை துயிலுமில்லத்தில் மூன்று மாவீரர்களின் தாயாரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரியபண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும், ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில் மன்னார் பொதுஅமைப்புகளின் ஒன்றியத் தலைவர் சிவகரனும் பிரதான சுடர்களை ஏற்றி வைத்தனர்.

இதையடுத்து, மாவீரர்கள் நினைவாக சுடர்கள் ஏற்றப்பட்டன. துயிலுமில்லங்களுக்கு வந்திருந்த பெற்றோர், உறவினர்கள், தமது உறவுகளின் கல்லறைகளைத் தேடியதும், அவர்கள் நினைவாக கதறியழுததும், மனதை உருக்கும் காட்சிகளாக இருந்தன.

கிளிநொச்சி – கனகபுரம் துயிலுமில்லத்தில்








கிளிநொச்சி -முழங்காவில் துயிலுமில்லத்தில்





யாழ்ப்பாணம் – உடுத்துறை துயிலுமில்லத்தில்




முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில்






மன்னார்- பெரியபண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில்




மன்னார் -ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில்