Breaking News

விடுதலை புலி உறுப்பினருக்கு எதிரான வழக்கு வாபஸ்!



கட்டுநாயக்க விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிரான வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சட்ட மா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 5505 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சட்ட மா அதிபர் நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற ஆணையாளர் வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதியளித்துள்ளார்.

குறித்த புலி உறுப்பினர், இரண்டு தற்கொலை குண்டு அங்கிகள், நான்கு கைக்குண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றிணை வைத்திருந்தமை தொடர்பில் உண்மையை ஒப்புக் கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

இதனால் நட்டம் ஏற்படுத்திய வழக்கினை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதியளித்த ஆணையாளர் ஐராங்கனி பெரேரா, வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் இருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

2001ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம், விமானப்படை முகாம் மீது தாக்குதல் நடத்தியமை, விமானங்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐந்து பேருக்கு எதிராக 311 குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

தாக்குதல் சம்பவத்தில் 7 விமானப்படையினர் கொல்லப்பட்டதுடன் 24 படையினர் காயமடைந்திருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதிவாதிகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.