அங்கவீனமுற்ற தேரர்கள் எங்கிருந்து வந்தார்கள் -பிரதமர் கேள்வி
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடாத்திய பொலிஸாரை பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஓய்வுதியம் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அங்கவீனமுற்ற இராணுவ குழுவின் மீது ஜனாதிபதி செயலகத்துக்கு அருகாமையில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன நேற்று (11) பாராளுமன்ற விவாதத்தின் போது வினா எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நானும் இது தொடர்பில் எனது கவலையை தெரிவித்துக் கொள்கின்றேன். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்களின் சகல கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அவர்கள் ஏன் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என கண்டறிய வேண்டும் இக்கலந்துரையாடலின் போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அங்கவீனமுற்ற தேரர்களும் இந்த இடத்திற்கு எவ்வாறு வந்தார்கள் என்பது ஒரு பிரச்சினையாகவுள்ளது. இங்கு அங்கவீனம் என்பது இந்த தேரர்கள் பௌத்த மதத்தில் அங்கவீனம் அடைந்துள்ளனர் என்பதாகும் எனவும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
இவ்வாறு இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்திய பொலிஸ் அதிகாரிகள் இருப்பதாயின் அவர்களை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.








