மாவீரர்நாளில் ஒன்றிணைவோம்: தமிழீழ விடுதலைப் புலிகள் அழைப்பு
பிரான்ஸ்நாட்டில் போராளிகள் மீதும், கிளைச் செயற்பாட்டாளர்கள் மீதும் இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவங்களுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, எதிர்வரும் 27ஆம்நாள் அன்று புலம்பெயர் தேசங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகள் இடம்பெறுகின்ற அனைத்து மண்டபங்களிலும் நாம் அனைவரும் ஒன்றா அணிதிரண்டு அஞ்சலி செலுத்த வேண்டும் எனக்கோரியுள்ளது.
அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்,
24.11.2016.
இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிடமுடியாது.
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவே.பிரபாகரன் அவர்கள்-
அன்பான தமிழீழ மக்களே!
மாவீரர்களைப் பூசித்து வணங்கும் திருநாளான மாவீரர்நாளில்அனைவரும் ஒன்றிணைவோம்…...
ஆண்டாண்டுகாலமாக அந்நியரின் ஆக்கிரமிப்பிற்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாளாகவே நாம் மாவீரர்நாளை நினைவுகூருகின்றோம்.இப்புனித நாளில் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொள்வதையும், மாவீரர்களுக்கு வணக்கம்செலுத்துவதையும் தடுத்துநிறுத்தவே தாயகத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், மாவீரர்நாள் நிகழ்வுக்கும் தடைவிதிக்கபட்டுள்ளது.
இதேபோல்புலம்பெயர் நாடுகளில் போராளிகள் மற்றும் கிளைச்செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைக் கும்பல்களின் அடாவடித்தனங்களின் ஊடாக தமிழ்மக்கள் மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத்தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் விசமிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
எதிரியின் இச்சதிவலையில் சிக்கியுள்ள சிலரின் உதவியுடன் புலம்பெயர்நாடுகளிலும் எமது தேச விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக வன்முறைகளைத் தூண்டிவிட்டுள்ளனர். இத்தகைய தாக்குதல்களின் ஊடாக சிலர், மாவீரர்களின் புனிதத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தவும் நினைக்கின்றனர். இதேபோல் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களுக்களின் தேசிய ஆன்மாவைச் சிதைத்து எமது விடுதலைப் பயணத்திற்குத் தடைபோடவும் எண்ணுகின்றனர்.
எதிரியின் இத்தகைய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பிரான்ஸ்நாட்டில் போராளிகள் மீதும், கிளைச் செயற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய தாக்குதல் சம்பவங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதேபோல் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எமது தேசவிடுதலைப் போராட்டத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள் மற்றும் செய்திகள் தொடர்பாகவும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எனவே எதிர்வரும் 27ஆம் நாள் அன்று புலம்பெயர் தேசங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகள் இடம்பெறுகின்ற அனைத்து மண்டபங்களிலும் நாம் அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு, எமது தேசம் விடுதலைபெற்று எமது மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம்செய்த எமது மானவீரர்களை நெஞ்சப்பசுமையில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அன்பாகவும் உரிமையுடனும் எமது மக்களாகிய உங்களிடம் வேண்டிநிற்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழீழ விடுதலைப் புலிகள். என்றுள்ளது.








