Breaking News

விஸ்வரூபமெடுத்த உண்ணாவிரதம் ! செ. சிறி­தரன்

இரண்டு வார காலப்பகுதியில் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் ருவான் விஜேவர்தன அளித்துள்ள உறுதிமொழிக்கு அமைவாக எத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கத் தரப்பினர் எடுக்கப் போகின்றார்கள்? சிக்கல்கள் நிறைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வு காணப்படும் என்பது தெரியவில்லை. ஆயினும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய கடினமானதோர் அரசியல் நிலைமையை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள நிலையில் சாகும் வரையிலான வவுனியா உண்ணாவிரதம் மிக முக்கியமானதொரு நிகழ்வாக நடந்தேறியிருக்கின்றது.

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­வர்­களைக் கண்­டு­பி­டித்துத் தர வேண்டும் என வீதி­களில் இறங்கிப் போராடி களைத்து, விரக்­தியின் விளிம்­பிற்குச் சென்­றி­ருந்த காணாமல் போனோரின் தாய்­மார்கள் 14 பேர் நடத்­திய சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் பல தரப்­பி­ன­ரையும் உலுப்­பி­யி­ருக்­கின்­றது.

வடக்­கு­, கி­ழக்குப் பிர­தே­சங்­களில் கைது செய்தும், கைய­ளிக்­கப்­பட்டும் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் தாய்­மார்கள் சிலர் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைத் தேடிக் கண்­ட­றியும் சங்கம் என்ற பெயரில் ஒன்­றி­ணைந்­தனர்.

அதனை ஓர் அமைப்­பாக உரு­வாக்கி, காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது? அவர்­களைக் காணாமல் ஆக்­கி­யது யார்? எதற்­காக இது நடை­பெற்­றது? அவர்கள் என்ன ஆனார்கள் என அடுக்­க­டுக்­காகக் கேள்­வி­களை எழுப்பி, அவற்­றுக்கு உரிய பதில்­களைத் தேட முற்­பட்­டி­ருந்­தனர்.

அது­மட்­டு­மல்­லாமல், அவ்­வாறு வலிந்து காணாமல் ஆக்­கி­ய­­மைக்கு அர­சாங்கம் பொறுப்பு கூற வேண்டும், இந்த அப்­ப­ட்­ட­மான மனித உரிமை மீறல்­க­ளுக்கு அரசு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்து தொடர்ச்­சி­யாகத் தாங்­க­ளா­கவே போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இந்தப் போராட்­டங்­களின் உச்ச வடி­வ­மா­கவே கடந்த 23 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வவு­னி­யாவில் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஒன்றை அவர்கள் ஆரம்­பித்­தி­ருந்­தார்கள்.

காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும். விசா­ர­ணை­க­ளின்றி பல வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக சிறைச்­சா­லை­களில் அடைத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­களை நிபந்­த­னை­க­ளின்றி விடு­தலை செய்ய வேண்டும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்க வேண்டும் போன்ற முக்­கிய விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாகத் தமது கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்­தனர்.

அன்­றைய தினம் காலை வவு­னியா கந்­த­சாமி ஆல­யத்தில் உருக்­க­மா­ன­தொரு வழி­பாட்டில் அந்தத் தாய்­மார்கள் 14 பேரும் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

அவர்­க­ளோடு அந்த அமைப்பைச் சேர்ந்த ராஜ்­குமார் உள்­ளிட்ட சில முக்­கி­யஸ்­தர்­களும் ஆத­ர­வா­ளர்­களும் கலந்து கொண்­டனர். ஒரே­யொரு தேங்­கா­யுடன் ஆல­யத்தைச் சுற்றி வந்து அதனை ஒரு தாயார் உடைத்தார். அந்த வழி­பாடு மிகவும் உணர்­வு­பூர்­வ­மாக இருந்­தது. தாய்­மார்­களின் கண்கள் குள­மா­கி­யி­ருந்­தன.

மனம் உருகி அவர்கள் பிரார்த்­தனை செய்­ததை உண­ரவும், தமது பிள்­ளைகள் எப்­ப­டி­யா­வது உயி­ருடன் திரும்பி வர­வேண்டும் என்று முருகப் பெரு­மா­னிடம் வேண்­டி­யதை மான­சீ­க­மாகக் கேட்­கவும் முடிந்­தது.

ஆலய வழி­பாட்டின் பின்னர் ஒரே­யொரு பதா­தை­யுடன் அவர்கள் ஊர்­வ­ல­மாக ஆல­யத்தில் இருந்து புறப்­பட்டு மணிக்­கூட்டுச் சந்­தியில் திரும்பி ஏ9 வீதியில் வவு­னியா அஞ்சல் அலு­வ­ல­கத்­திற்கு எதிரில் தமது சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்­தார்கள்.

அப்­போது, அவர்கள் வீதி­யோ­ரத்தில் நிலத்தில் இருப்­ப­தற்­குக்­கூட எந்­த­வி­த­மான முன்­னேற்­பாடும் இருக்­க­வில்லை. இந்த உண்­ணா­வி­ர­தத்தை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது, எந்த வகையில் நகர்த்தி கொண்டு செல்­வது என்ற முன் ஆயத்­தங்கள் எதுவும் சாகும் வரை உண்­ணா­வி­ரதம் இருப்­ப­தற்குத் துணிந்­தி­ருந்­த­வர்­க­ளிடம் தயார் நிலையில் இருக்­க­வில்லை.

செல்லும் திசை­ய­றி­யாது ஆரம்­பிக்­கப்­பட்ட ஒரு போராட்­ட­மா­கவே அது ஆரம்­பத்தில் தோன்­றி­யது. ஆனாலும் அந்தத் தாய்­மார்­களின் இத­யங்­களில் ஒரே­யொரு தீர்­மானம் மாத்­திரம் இரும்­பை­யொத்த உறு­தி­யுடன் மிகுந்த வைராக்­கி­யத்­துடன் உருண்டு திரண்­டி­ருந்­தது. உயிர் போவதைப் பற்றிக் கவ­லை­யில்லை. எங்­க­ளுக்கு எங்­க­ளு­டைய பிள்­ளை­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதைப் பற்றி அறிந்து கொள்ளும் வரையில் நாங்கள் சோரப் போவ­தில்லை என்ற எண்­ணமே உயர்ந்து மேலோங்­கி­யி­ருந்­தது.

எந்­த­வி­த­மான அர­சியல் பின்­ன­ணியும் அற்ற நிலையில் எவ­ரு­டைய உத­வி­க­ளையும் முன்­கூட்­டியே எதிர்­பா­ராத நிலையில் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­திற்கு பக்­க­ப­ல­மாக இருந்து செயற்­ப­டு­வ­தற்­காக அவ­சர அவ­ச­ர­மாக ஒரு குழு உரு­வாக்­கப்­பட்டு சில உத­விகள் செய்­யப்­பட்­டன. கந்­த­சாமி ஆல­யத்தில் இருந்து ஊர்­வ­ல­மாக வந்த தாய்­மார்கள் கால் கடுக்க அஞ்சல் அலு­வ­லகம் உள்ள பக்­க­மாக அதன் எதிரில் நின்று கொண்­டி­ருந்­தார்கள். வீதிக்கு அப்பால் வவு­னியா தலை­மை­யக பொலிஸ் நிலையம்.

எனவே அங்கு, எந்த இடத்தில் அவர்கள் அமர்­வது என்­பது தீர்­மா­னிக்­கப்­பட்டு சில பாய்­களும் தறப்­பாள்­களும் கொண்டு வரப்­பட்­டன. அவற்றை விரித்து அவர்கள் அமர்ந்த நேரம், அதற்­கான அனு­ம­தியை பொலி­ஸா­ரிடம் இருந்து பெற வேண்­டி­யி­ருந்­தது. பொலிஸார் அந்த அனு­ம­தியை வவு­னியா நக­ர­ச­பைதான் வழங்க வேண்டும் என்­றார்கள். நக­ர­சபை அதி­கா­ர­பூர்­வ­மாக அனு­மதி வழங்­க­வில்லை. இந்த நிலை­யில்தான் சாகும்­வ­ரை­யி­லான அந்த உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஆரம்­ப­மா­கி­யது.

திடீர் திடீ­ரென மழை கொட்டிக் கொண்­டி­ருந்த நேரம். உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்கள் நிலத்தில் அமர்ந்­தி­ருந்­தார்கள். எந்த நேரத்­திலும் மழை பெய்­யலாம் என்ற நிலை­யில்தான் அவ­சர அவ­ச­ர­மாக கொட்டில் போடப்­பட்­டது. எதிர்­பார்த்­த­ப­டியே மழையும் பெய்­தது. உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்கள் வீதி­வ­ழி­யா­கவும் ஓரத்­திலும் நிலத்தில் ஓடி­வந்த மழை நீரில் நனை­யா­தி­ருப்­ப­தற்­காகக் கதி­ரைகள் கொண்டு வரப்­பட்­டன.

அதன் பின்­னர்தான் மேடை அமைப்­புக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற வாங்­குகள் போன்­றவை கொண்டு வரப்­பட்டு, அதில் அவர்­களை அமரச் செய்­தனர். இரவு நேரத்தில் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக ஒரே­யொரு அரிக்கன் லாம்பு அந்தக் கொட்­டிலின் முன்­பக்­கத்தில் தொங்க விடப்­பட்­டது.

மின்­சார இணைப்பு கிடைக்­குமா என்று மின்­சார சபை­யி­ன­ரிடம் கேட்­ட­போது, அதி­கா­ர­பூர்­வ­மாகத் தர­மு­டி­யாது என்று அவர்கள் கைவி­ரித்­து­விட்­டார்கள். அதன் பின்னர் கண்டும் காணாத நிலையில் ஏதோ ஒரு வகையில் மின் இணைப்பு பெறப்­பட்டு இரண்டு லைட்­டுகள் எரி­ய­வி­டப்­பட்­டன.

இதற்­கி­டையில் வவு­னியா நக­ர­ச­பையும், வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யி­னரும், தங்­க­ளு­டைய அனு­ம­தி­யின்றி உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்கள் அந்த இடத்தில் பொது­மக்­க­ளுக்கும் பொது போக்­கு­வ­ரத்­துக்கும் இடை­யூறு ஏற்­ப­டுத்தத் தக்க வகையில் கூடி­யி­ருப்­ப­தாக பொலிஸ் நிலை­யத்தில் ஒரு முறைப்­பாடு பதிவு செய்­த­தா­கவும் ஒரு தகவல். அதனை உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதம் என்­பது எவ்­வாறு இடம்­பெறப் போகின்­றது, அதற்கு எதி­ராக எவ­ரேனும் அதி­கா­ரிகள் குறிப்­பாக பொலிஸாரோ அல்­லது அரச புல­னாய்­வா­ளர்­களோ ஏதேனும் தீவி­ர­மான நட­வ­டிக்­கைகள் எடுக்கக் கூடுமோ, ஏதேனும் அசம்­பா­வி­தங்கள் ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்சம் பொது­வாக வெளியில் எல்­லோ­ரு­டைய மனங்­க­ளையும் கௌவி­யி­ருந்­தது.

ஆனால் உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களின் மனங்­களில் வெளி­வி­ட­யங்கள், சுற்றுச் சூழல் நிலை­மைகள் பற்­றிய எந்­த­வி­த­மான பிரக்­ஞையும் இருக்­க­வில்லை. தமது பிள்­ளை­க­ளுக்கு என்ன நடந்­தது, அவர்கள் எங்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதைக் கண்­ட­றிய வேண்டும். அதற்­கான பொறுப்பை அர­சாங்­கத்­திடம் இருந்து பெற்­று­விட வேண்டும் என்ற எண்­ணமே அவர்­க­ளு­டைய மனங்­களை தீவி­ர­மாக ஆக்­கி­ர­மித்­தி­ருந்­தது.

இத்­த­கைய ஒரு சூழ­லில்தான் வவு­னி­யாவில் இடம்­பெற்ற காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் தாய்­மார்கள் முன்­னெ­டுத்­தி­ருந்த சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதம் உரு­வாகி செயற்­பட்­டது, அதே­நேரம், அவர்­க­ளு­டைய போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்து ஒத்­து­ழைப்­ப­தற்கு வவு­னியா முச்­சக்­கர வண்டி உரி­மை­யாளர் சங்­கத்­தினர் முன்­வந்­தனர். வவு­னியா வர்த்­தகர் சங்கம், பல்­வேறு இளைஞர் அமைப்­புக்கள், இளைஞர் யுவ­திகள், மன்னார், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, யாழ்ப்­பாணம் போன்ற வெளி மாவட்­டங்­களைச் சேர்ந்த காண­ாமல் போயுள்­ள­வர்­களின் தாய்­மார்­களும் தந்­தை­யரும் இரத்த உற­வி­னர்­களும் வில்லில் இருந்து புறப்­பட்ட அம்­பைப்­போன்று கிளம்பி வந்­தி­ருந்­தார்கள்.

மிகவும் அமை­தி­யாக ஆரம்­ப­மா­கிய இந்த சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் இரண்­டா­வது நாள் தீவிரம் பெற்­றது. சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதம் இருக்­கின்­றார்கள் என்ற தகவல் வெளிப்­பட்­ட­தை­ய­டுத்து, திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம் போன்ற மாவட்­டங்­களில் ஆத­ர­வாக அடை­யாள உண்­ணா­வி­ரதப் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. காணாமல் போன­வர்கள் தொடர்பில் அக்­க­றையும் கரி­ச­னையும் கொண்­டி­ருந்த பலர் வவு­னியா நோக்கி உதி­ரி­க­ளா­கவும் குழுக்­க­ளா­கவும் படை­யெ­டுக்கத் தொடங்­கினர்.

முத­லா­வது நாளே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் வட­மா­காண சபை உறுப்­பி­னர்­களும் உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்­களை, நேர­டி­யாகச் சென்று பார்­வை­யிட்­டனர். அவர்­க­ளுக்குத் தமது ஆத­ரவைத் தெரி­வித்து ஒத்­து­ழைத்­தனர். பொது அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் ஆத­ர­வ­ளித்து, உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­திற்கு உரம் சேர்த்­தனர்.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன், சிவ­ஞானம் சிறி­தரன் ஆகியோர் வவு­னியா உண்­ணா­வி­ர­தத்­திற்கு ஆத­ர­வாகக் குரல் எழுப்­பி­ய­துடன், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டுள்ள பாரா­மு­க­மான நட­வ­டிக்­கைகள், அணு­கு­மு­றைகள் குறித்து கார­சா­ர­மான கேள்­வி­களை எழுப்­பினர். கடு­மை­யாக சாடினர்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக பல அச்­சு­றுத்­தல்கள், நெருக்­கு­தல்­க­ளுக்கு மத்­தியில் வாக்­க­ளித்த மக்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் என்று எதிர்­பார்த்து எதிர்­பார்த்து, ஏமாற்­ற­ம­டைந்­தி­ருப்­பது குறித்து இவர்கள் இடித்­து­ரைத்­தனர். சாகும் வரையில் உண்­ணா­வி­ரதம் இருக்­கின்ற தாய்­மார்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தினர்.

இராஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் ஏற்­பாட்டில் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் சந்­தித்து வவு­னி­யாவில் இடம்­பெ­று­கின்ற உண்­ணா­வி­ரதப் போராட்டம் குறித்து எடுத்­து­ரைத்­தி­ருந்தார். சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்கள் தண்­ணீர்­கூட அருந்­தாமல் கடும் விர­தத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர்­களில் மூவரின் உடல் நிலை மோச­ம­டைந்து செல்­வ­தா­கவும் எடுத்­து­ரைத்­தி­ருந்தார்.

இந்த உண்­ணா­வி­ரதப் போராட்டம் நீடிக்­கு­மே­யானால், வடக்கு, கிழக்குப் பிர­தேசம் எங்கும் போராட்­டங்கள் வெடிக்கும். நிலை­மைகள் மோச­ம­டையும். அத்­துடன் உண்­ணா­வி­ரதம் இருக்­கின்ற வய­தான தாய்­மார்­களில் எவ­ருக்­கேனும் ஏதேனும் நடந்தால், அதுவும் மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும், அதற்­கான பொறுப்பை அர­சாங்­கமே ஏற்க வேண்­டி­யி­ருக்கும். எனவே நிலை­மைகள் கட்­டுக்­க­டங்­காமல் மீறிச்­செல்­வதைத் தடுக்கும் வகையில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யதன் அவ­சியம் பற்­றியும் எடுத்துக் கூறி­யி­ருந்தார்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் இருக்­கின்­றார்­களா? இல்­லையா என்­பது குறித்து அர­சாங்கம் உட­ன­டி­யாகப் பதில் சொல்ல வேண்டும். ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்டு பல வரு­டங்­க­ளா­கி­விட்­டன.பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சிறைச்­சா­லை­களில் அடைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் உற­வி­னர்­களும் விரக்தி அடைந்­தி­ருக்­கின்­றார்கள். அவர்­களால் உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது அவர்கள் நம்­பிக்கை இழந்­து­விட்­டார்கள்.

இந்த நிலையில் உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் உயி­ருடன் இருக்­கின்­றார்­களா இல்­லையா என்­ப­தை­யா­வது தெரி­விக்க வேண்டும் என கேட்­டுக்­கொண்டார். அதற்குப் பதி­ல­ளித்த பிர­தமர், அதனை தாங்கள் எவ்­வாறு கூற முடியும் என கேள்வி எழுப்­பி­ய­துடன், முன்­னைய அர­சாங்­கத்தில் நடை­பெற்ற சம்­ப­வங்கள் பற்றி தங்­களால் எதையும் கூற முடி­யாது என தெரி­வித்­து­விட்டார்.

அப்­ப­டி­யானால், கைது செய்­யப்­பட்­ட­வர்­களும், சர­ண­டைந்­த­வர்­களும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களில் முக்­கி­ய­மாக இடம்­பெற்­றி­ருக்­கின்­றார்கள். எனவே. அர­சாங்­கத்­திடம் இருக்­கின்ற பெயர்ப்­பட்­டி­ய­லை­யா­வது வெளி­யிட வேண்டும் என்று பாராளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் சுட்­டிக்­காட்­டினார். அதற்குப் பதி­ல­ளித்த பிர­தமர், சட்டம் ஒழுங்­கிற்குப் பொறுப்­பான அமைச்சர் சாகல ரட்­நா­யக்­க­விடம் கூறி அதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­வ­தாகக் கூறினார்.

அதே­நேரம் நல்­லெண்ண நட­வ­டிக்­கை­யாக சிறைச்­சா­லை­களில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களில் ஒரு­சி­ல­ரை­யா­வது அர­சாங்கம் விடு­தலை செய்ய வேண்டும். அந்த நட­வ­டிக்­கை­கூட சாகும் வரையில் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­களை சிறிய அள­வி­லா­வது ஆறுதல் படுத்­து­வ­தாக அமையும் என்றும் பாராளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் பிர­த­ம­ரிடம் எடுத்­து­ரைத்­தி­ருந்தார்.

ஆனால் காணாமல் போயுள்­ள­வர்­களைக் கண்­டு­பி­டித்துத் தரு­மாறு கோரி நடத்­தப்­பட்டு வரு­கின்ற போராட்­டங்கள் குறித்து பிரதமர் வெளி­யிட்ட கருத்­துக்கள் கடும் விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றன. காணாமல் ஆக்­கப்­பட்ட தமது உற­வுகள் உயி­ருடன் இருக்­கின்­றார்கள். இரா­ணு­வத்­தினர் அவர்­களை இர­க­சிய முகாம்­களில் அடைத்து வைத்­தி­ருக்­கின்­றார்கள் என்ற நம்­பிக்கை கொண்­டி­ருக்கும் நிலையில் காணாமல் போன­வர்­களில் பலர் உயி­ருடன் இல்­லை­யென்றே தான் நம்­பு­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்ளார்.

அத­்துடன், காணாமல் போயுள்­ள­வர்­களில் பலர் வெளி­நாடுகளுக்கு சென்­றி­ருப்­ப­தாக பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் எனவே, அவர்­களை இலங்­கையில் தேடிக் கண்­டு­பி­டிக்க முடி­யாது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.இந்தக் கூற்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மட்­டு­மல்­லாமல் தமிழ் மக்­க­ளையும் குறிப்­பாக உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­க­ளையும் முகம் சுழிக்­கவும், சீற்­ற­மு­றவும் செய்­தி­ருந்­தது.

எனினும் உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்­களைச் சந்­தித்து அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­காக அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­தனை வவு­னி­யா­வுக்கு அனுப்பி வைப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தத்தின் நான்­கா­வது நாளா­கிய வியா­ழக்­கி­ழமை அமைச்சர் சுவா­மி­நாதன் வவு­னி­யா­வுக்கு வருகை தருவார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்கள் தமது சங்­கத்தின் மூல­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் எதிர்க்­கட்சித் தலை­வரும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் ஆகிய மூவ­ருக்கும் நேர­டி­யாக எழு­திய கடி­தத்தின் மூலம் தமது சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதம் பற்­றியும், கோரிக்­கைகள் பற்­றியும் தெளி­வாக எடுத்­து­ரைத்­தி­ருந்­தனர். தமது கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­படும் வரையில் போராட்டம் தொடரும். கைவி­டப்­ப­ட­மாட்­டாது என்­ப­தையும் சுட்­டிக்­காட்டி, உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என கோரி­யி­ருந்­தனர்.

ஆனால், அவர்­க­ளி­ட­மி­ருந்து நேர­டி­யாக எந்­த­வி­த­மான பதிலும் வர­வில்லை. அதே­நேரம், வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வ­ர­னுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட பாராளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன், வவு­னி­யாவில் சாகும் வரையில் உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்­களின் உடல் நிலை மோச­ம­டைந்து செல்­கின்­றது. இது குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் தொடர்பு கொண்டு பேச்­சுக்கள் நடத்தி, ஏதா­வது நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேளுங்கள் என கேட்­டி­ருந்தார்.

அத­னை­ய­டுத்து முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் ஜனா­தி­ப­திக்கு அவ­சர கடிதம் ஒன்றை அனுப்­பி­யி­ருந்தார். ஆயினும் உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்­களை நேர­டி­யாக வந்து பார்­வை­யி­டு­மாறு கேட்­டி­ருந்த போதிலும், வேலைப்­பளு கார­ண­மாக அதனை உட­ன­டி­யாகச் செய்ய முடி­யா­தி­ருப்­ப­தாகக் கூறி­யி­ருந்தார்.

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருந்­த­வாறு, அமைச்சர் சுவா­மி­நாதன் வவு­னி­யா­வுக்கு வருகை தருவார் என எதிர்­பார்க்­கப்­பட்ட நேரத்தில் பாது­காப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன வியா­ழ­னன்று மாலை வவு­னி­யா­வுக்கு திடீ­ரெ­ன ­வி­ஜயம் செய்து உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்­க­ளுடன் நேர­டி­யாகப் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டார். அந்தப் பேச்­சு­வார்த்­தைகள் நீண்ட நேரம் நடை­பெற்­றன,

உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்கள் தமது உள்­ளக்­கி­டக்­கைகள், கவ­லைகள், துய­ரங்கள், பிரச்­சி­னைகள் எல்­லா­வற்­றையும் தயக்­க­மின்றி எடுத்­து­ரைத்­தார்கள். அர­சாங்­கத்தின் நிலை­மைகள் குறித்து அமைச்சர் எடுத்­து­ரைத்தார். அதே­வேளை, பாதிக்­கப்­ப­ட்­ட­வர்­களின் கருத்­துக்­க­ளையும் அவர்கள் கூறிய அனைத்து விட­யங்­க­ளையும் மிகவும் பொறு­மை­யாக அவர் கேட்­ட­றிந்து கொண்டார். இருந்­தாலும் உட­ன­டி­யாக இந்தப் பிரச்­சி­னைக்குத் தீரவு காண்­பது மிகவும் கடினம் என்­பதை சுட்­டிக்­காட்­டினார்.

இந்தப் பிரச்­சினை குறித்து பல்­வேறு தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சுக்கள் நடத்­தவும், விசா­ர­ணைகள் செய்­யவும் இரண்டு வார கால அவ­காசம் தேவை என குறிப்­பிட்டார். அந்தக் காலப்­ப­கு­தியில் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு, பிரச்­சி­னைக்குத் தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்­கலாம் என தெரி­வித்தார். இந்தப் பிரச்­சினை தொடர்­பாக அர­சாங்­கத்தில் சம்­பந்­தப்­பட்ட உயர் மட்­டத்­தி­ன­ரு­டனும், பிர­த­ம­ரு­டனும் உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்­களின் பிர­தி­நி­திகள் நேர­டி­யாகப் பேச்­சு­வார்த்தைகள் நடத்­தலாம். அதற்­கான ஏற்­பா­டு­க­ளையும் செய்­ய­மு­டியும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இந்தப் பேச்­சு­வார்த்­தை­களின் மூல­மாக அளிக்­கப்­ப­டு­கின்ற வாய்­மொழி மூல­மான உறு­தி­மொ­ழியை ஏற்க முடி­யாது. அதற்­கான உத்­த­ர­வாதம் எழுத்து மூல­மாக வரை­ய­றுக்­கப்­பட்ட திக­தி­யுடன் உறு­தி­ய­ளிக்­கப்­பட வேண்டும் என உண்­ணா­வி­ரதம் இருந்த தாய்­மார்கள் கூறி­யதை ஏற்று அதற்­க­மை­வாக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன, மன்னார் மறை மாவட்ட குரு­மு­தல்வர் அருட்­தந்தை விக்டர் சோசை உள்­ளிட்ட அருட்­தந்­தை­யர்­களின் முன்­னி­லையில், அவர்­களால் தமிழில் எழு­தப்­பட்ட உறுதிக் கடி­தத்தில் கையொப்­ப­மிட்டார்.

அத­னை­ய­டுத்து, உண்­ணா­வி­ரதம் முடி­வுக்கு வந்­தது. இதற்­க­மை­வாக பெப்­ர­வரி மாதம் 9 ஆம் திகதி காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­க­ளான 16 பேருடன் அருட்­தந்­தை­யர்கள் அடங்­கிய குழு­வினர் அர­சாங்கத் தரப்­பி­ன­ருடன் பேச்­சுக்கள் நடத்­த­வுள்­ளார்கள்.காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சினை என்­பது சாதா­ரண பிரச்­சி­னை­யல்ல. அது மிகவும் தீவி­ர­மா­னது. மோச­மான மனித உரிமை மீறல் மட்­டு­மல்­லாமல் மோச­மான சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­ற­லு­மாகும்.

இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்ற உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்­டிய கடப்­பாட்டில் சிக்கித் தவிக்­கின்ற அர­சாங்கம் காணாமல் போயி­ருப்­ப­வர்கள் பற்றி வெளி­யி­டு­கின்ற கருத்­துக்கள், எது­வா­னாலும், அது போர்க்­குற்றச் செயல் தொடர்­பான ஒப்­புதல் வாக்­கு­மூ­ல­மாகப் பயன்­ப­டுத்தக் கூடி­ய­தா­கவே இருக்கும்.

உரிமை மீறல் என்ற கோணத்தில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்கின்ற அதே­வேளை, ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளனர் என்ற விடயமானது பரந்து பட்டதாகவும் பல்வேறு வகைப்பட்டதாகவும் இருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகா தார அமைச்சராக இருந்த காலத்தில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், பாடசாலை நிகழ்வொன்றில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகின்ற நான்கு சிறுமிகள் பாடசாலை சீருடையுடன் ஏனைய மாணவிகள் சகிதம்அவருடன் காணப்பட்ட வீடியோ வெளியாகி யிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், அவர் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோது வெளியிடப்பட்ட தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரத்திலும் அந்த மாணவிகள் காணப்படுகின்றனர். இதுபற்றி அவர் ஜனாதிபதியாகிய பின்னர் நேரடியாக எடுத்துக் கூறி முறையிடப்பட்டிருந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதுபோன்று காணாமல் ஆக்கப்பட்ட வர்களில் வேறு சிலர், அரச தரப்பினருடன் காணப்பட்ட சந்தர்ப்பங்கள் பற்றிய ஆதாரங்களும் ஏற்கனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த விடயங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டன வா, விசாரணை அறிக்கைகள் இருக்கின்றன வா என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இரண்டு வார காலப் பகுதியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அளித்துள்ள உறுதிமொழிக்கு அமைவாக எத்தகைய நடவடிக் கைகளை அரசாங்கத் தரப்பினர் எடுக்கப் போகின்றார்கள். சிக்கல்கள் நிறைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வு காணப்படும் என்பது தெரியவில்லை.

ஆயினும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்­டிய கடி­ன­மா­னதோர் அர­சியல் நிலை­மையை அர­சாங்கம் எதிர் கொண்­டுள்ள நிலையில் சாகும் வரை­யி­லான வவு­னியா உண்­ணா­வி­ரதம் மிக முக்­கி­ய­மா­ன­தொரு நிகழ்­வாக நடந்­தே­றி­யி­ருக்­கின்­றது. அர­சாங்கத் தரப்பில் இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன அளித்­துள்ள உறு­தி­மொ­ழிக்கு அமை­வாக, இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­ப­டுமா அல்­லது சாக்குப் போக்கு கூறி இழுத்­த­டிக்­கப்­ப­டுமா என்று தெரி­யாது.

ஆனால், நீர்­கூட அருந்­தாமல் சில தாய்­மார்கள் நான்கு நாட்கள் மேற்­கொண்­டி­ருந்த சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் அர­சியல் களம் என்ற பரப்பைக் கடந்து, மனி­தா­பி­மானம், மனித உரி­மைகள் என்ற தளத்தில் விசு­வ­ரூ­ப­மெ­டுத்து, நல்­லாட்சி அர­சாங்­கத்தை கிடுக்­கிக்குள் சிக்க வைத்திருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்