Breaking News

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்



ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதங்கள் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு அமைய, இந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிககை சமர்ப்பிக்கப்படும்.

இந்த அறிக்கை தொடர்பாக வரும் மார்ச் 22 ஆம் நாள் விவாதம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஜெனிவாவுக்குச் சென்றுள்ளார்.

எட்டுப் பேர் கொண்ட சிறிலங்கா அரசதரப்புக் குழுவுக்குத் தலைமையேற்று மங்கள சமரவீர நேற்று பிற்பகல் ஜெனிவா வந்தடைந்தார்.

அவரது குழுவில், நல்லிணக்கச் செயலணியின் தலைவர் மனோ தித்தவெல, அரசியலமைப்பு சட்ட நிபுணர் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன, மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா உள்ளிட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இன்று ஆரம்பமாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், நாளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்.

இதன் போது,கடந்த 2015ஆம் ஆண்டு சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளிப்பார் என்றும், இந்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசத்தை வழங்குவதற்கு மனித உரிமை அமைப்புகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.