Breaking News

அரசியல் கைதி தாக்கப்பட்ட சம்பவம்: நடவடிக்கை எடுக்குமாறு சுவாமிநாதனுக்கு கடிதம்



கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் தமிழ் அரசியல் கைதியான வேலாயுதம் வரதாராஜன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வியடம் தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று காலை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேலாயூதம் வரதராஜன் என்ற தமிழ் அரசியல் கைதி சிகிச்சைக்காக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டராநாயக்க மீதான தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த அரசியல் கைதி கடந்த 21ஆம் திகதி சுகயீனமுற்ற நிலையில் சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் பணிப்புரைக்கு அமைய வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் தன்னை தாக்கியதாக வேலாயுதம் வரதாராஜன் தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையிலே, வேலாயூதம் வரதராஜனின் பிரச்சினை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டி.ம்.சுவாமிநாதனிடம் கடிதம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.