Breaking News

வித்தியா கொலை வழக்கு – யாழ். மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகள் ஆரம்பம்



புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

2015 மே 13ஆம் நாள் நடந்த இந்தக் கொலை தொடர்பான விசாரணைகள் முடிவடைந்ததை அடுத்து, 9 சந்தேக நபர்களுக்கு எதிராக, 41 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்ட, நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகள் இளஞ்செழியன், மற்றும் பிரேம்சங்கர் ஆகியோரைக் கொண்ட தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.

இன்று தொடக்கம் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக இந்த வழக்கின் விசாரணைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கில் நீதியை வழங்கும் செயற்பாடுகள் இழுத்தடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், இந்த விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.