Breaking News

சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியாகும் ‘பாகுபலி-2’

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்திருந்தது. வசூலிலும் ரூ.1000 கோடியை தாண்டி இந்திய சினிமாவில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையையும் படைத்தது. ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே, இரண்டாவது இடத்தில் இருந்த ‘தங்கல்’ படம் சீனாவில் வெளியானது. அங்கு அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பால் வசூலும் குவியத் தொடங்கியது. 

இதையடுத்து, அதிக வசூலில் முதலிடத்தில் இருந்த ‘பாகுபலி-2’ அடுத்த சில வாரங்களிலேயே இரண்டாவது இடத்துக்கு வந்தது. இந்நிலையில், ‘பாகுபலி-2’ படத்தை சீனாவில் வெளியிட்டால் ‘தங்கல்’ சாதனையை முறியடித்துவிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர். அதன்படி, வருகிற செப்டம்பர் 17-ந் தேதி ‘பாகுபலி-2’ படத்தை சீனாவில் வெளியிடவுள்ளனர்.


அதற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினர் அனைவரும் சீனாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் சுமார் 4000 திரையரங்குகளில் இப்படத்தை திரையிடப் போவதாக கூறப்படுகிறது. ‘தங்கல்’ படம் சீனாவில் 9000 திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

‘பாகுபலி-2’ படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்த இப்படத்துக்கு மரகதமணி இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவந்து இன்றோடு 50 நாட்கள் ஆகியுள்ளது. 50 நாட்களுக்குள் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையும் படைத்துள்ளது.