Breaking News

முப்படைத் தளபதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் அவசர சந்திப்பு

ஸ்ரீலங்காவுக்கு முன்பாக காணப்படுகின்ற
மனித உரிமை சவால்களை வென்று கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா முப்படைத் தளபதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறையைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அவசர சந்திப்பொன்றை இன்றைய தினம் நடத்தியுள்ளார். 

 மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் மற்றும் ஐ.நா பொதுச் செயலாளரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் பெல்ட்மன் ஆகியோர் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்து திரும்பியுள்ள நிலையிலேயே வெளிவிவகார அமைச்சரின் இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றது.

 ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும், தமிழ்க் கைதிகள் எவ்வித காரணங்களும் இன்றி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பில் ஊடக சந்திப்பை நடாத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான பென் எமர்சனுக்கும், ஸ்ரீலங்கா நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை அரசியல் களத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. இந்த நிலையிலேயே பல்வேறு விடயங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் பாதுகாப்பு துறையினர் மற்றும் மனித உரிமை விவகாரப் பிரதிநிதிகளுடன் இன்று அவசர சந்திப்பொன்றை கொழும்பில் நடத்தியுள்ளனர்.

 ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவினர் மீது வெளிநாட்டு அரங்கில் பிழையான விம்பம் காணப்படுமேயானால் அதனை எவ்வாறு சீர்ப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது ஆழமாக ஆராயப்பட்டது என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டு மன்றி ஸ்ரீலங்கா பாதுகாப்புப் பிரிவின் கௌரவம், பாதுகாப்பு, நாட்டின் ஸ்திரத்தன்மை, இறைமை என்பன குறித்து சர்வதேசத்துடன் எவ்வாறு கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் சர்வதேசத்தை வென்றுகொள்வதற்காக மனித உரிமை காப்பு நடவடிக்கை களை பலப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்புக்கு அமைய நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் பிரிவின் பங்களிப்பு, பொறுப்புக்கள் என்பன தொடர்பாகவும், அவற்றுக்கு தடைகள் இருந்தால் அதனை நீக்குவது குறித்தும்  பேசப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சந்திப்பின்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாதுகாப்புப் பிரிவின் பங்களிப்பு எவ்வகையில் வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சில் இன்று பகல் நடைபெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்ண, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எசல வீரகோன், இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம ஆகியோர் கலந்துகொண்டனர்.