இராணுவ பாதுகாப்பை ஒருபோதும் கோரமாட்டேன்-முதலமைச்சர் - THAMILKINGDOM இராணுவ பாதுகாப்பை ஒருபோதும் கோரமாட்டேன்-முதலமைச்சர் - THAMILKINGDOM
 • Latest News

  இராணுவ பாதுகாப்பை ஒருபோதும் கோரமாட்டேன்-முதலமைச்சர்

  வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என கோரும் நான் இராணுவத்தின் பாதுகாப்பை ஒரு போதும் பெற மாட்டேன் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான சார்ஜன்ட் ஹேமச்சந்திரவின் பூதவுடலுக்கு சிலாபம் பங்கதெனிய பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் இடம்பெற்ற சந்திப்பொன்றில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

  சார்ஜன்ட் ஹேமச்சந்திரவின் மரணச் சடங்கில் கலந்துகொள்ள ஜெனசத பெரமுன பொதுச் செயலாளர் வண. பத்திரமுல்ல சீலரட்ண தேரர் அங்கு வந்திருந்தார். அங்கு முதலமைச்சரை சந்தித்த அவர் வடக்கின் நிலைமைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

  வடக்கில் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் இளைஞர்களிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டும் எனவும் கூறிய அவர், முதலமைச்சருக்கும் இளைஞர் குழுக்களால் உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறியதுடன் பொலிஸாரை விட இராணுவத்தின் பாதுகாப்பே பொருத்தமானது எனவும் இராணுவத்தின் பாதுகாப்பை பெறுமாறும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்;

  வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என நான் கூறி வருகின்றேன். அப்படியிருக்கையில், நான் எப்படி இராணுவத்தின் பாதுகாப்பை கோருவேன்? எனக்கு பொலிஸாரின் பாதுகாப்பே போதுமானது எனத் தெரிவித்தார்.

  மேலும் வடக்கில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் இளைஞர்களிடமிருந்து ஆயுதங்களை களையுமாறும் சிலரட்ண தேரர் கூறியதற்கு முதலமைச்சர் பதிலளிக்கையில்;

  நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது பொலிஸ் சார்ஜன்டை சுட்டவர் தன்னுடன் ஆயுதத்தை கொண்டுவரவில்லை. அவர் அந்த பொலிஸ் சார்ஜன்டின் இடுப்பு பட்டியில் இருந்த துப்பாக்கியை பறித்தே அவரைச் சுட்டுள்ளார்.

  அத்துடன், வடக்கில் தற்போது இளைஞர்களிடம் ஆயுதம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே அவை களையப்பட்டு விட்டன. தற்போது படையினர் மற்றும் பொலிஸாரிடமே ஆயுதங்கள் உள்ளன. சட்டம் , ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அவர்களது கடமையாகும் எனவும் கூறியுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இராணுவ பாதுகாப்பை ஒருபோதும் கோரமாட்டேன்-முதலமைச்சர் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top