Breaking News

விடுதலை புலிகள் மீண்டும் வருவார்களா ? வவுனியாவில் தகவல் பதட்டம்.



விடுதலை புலிகளின் பெயரில் வவுனியாவில் தூண்டு பிரசுரம் போடப்பட்டுள்ளது. வவுனியா,நகர் மற்றும் குருமன்காடு போன்ற பகுதிகளில் விடுதலைப்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு இந்த துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. 

பெண்களை துஷ்பிரயோகம் செய்வோர் மற்றும் தமிழர்கள் மீது வாள் வெட்டு நடத்துபவர்களுக்கு எதிராக இந்த துண்டுபிரசுரத்தில் கருத்துக்கள் பதிவா கியுள்ளன. 

துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தது, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

வடக்கிலுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என தமிழர் தரப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அங்கு இராணுவப் பிரசன்னத்தின் அவசியத்தை அரசாங்கம் வலியுறுத்திவருகின்றது. 

அண்மைக்காலமாக வடக்கில் வாள்வெட்டு மற்றும் ஏனைய வன்செயல்கள் மேலோங்கி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவி அவசியமென பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் குறிப்பிட்டிருந்தார். 

தொடர்ச்சியாக தற்போது 2009 ஆம் ஆண்டு இராணுவ ரீதியில் தோற்கடி க்கப்பட்டார்கள் என அரசாங்கத்தால் கூறப்படும் விடுதலை புலிகளின் பெயரில் துண்டு பிரசுரங்கள் போடப்பட்டுள்ளன. 

இவ்வாறான செயற்பாடுகள் வடக்கில் இராணுவப் பிரச்சன்னத்தை தொடர்ந்தும் தக்க வைக்கும் நோக்கம் கொண்டதா என்ற சந்தேகம் தமிழர் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளமை தெரியவருகின்றது.