Breaking News

மாவீரர் நாள் ஓரிடத்திலேயே தமிழ்செல்வனின் மனைவி கருத்து(காணொளி)

பிரான்சில் விடுதலைப் புலிகளிடையே, “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு”, “இறுதிவரை களத்தில் நின்ற போராளிகள்” என இரு பிரிவாக ஏற்பட்ட பிளவு காரணமாக, பிரான்சில் உள்ள தமிழ் மக்களிடையே உள்ள குழப்ப நிலை தொடர்பாக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் இசைச்செல்வி இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

“மாவீரர் நாளை ஒரே இடத்தில் நினைவு கூருவது தான் நாங்கள் இந்த மாவீரர்களுக்கு செய்யும் பணி, அதுதான் மாவீரர்களை நினைவுபடுத்தும் நல்ல நிகழ்வாக இருக்கும்” என்று தெரிவித்தார் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் இசைச்செல்வி.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சு லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்ற புலிகளின் கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் பயணத்திற்கு பெரும் பங்காற்றி நின்ற தளபதிகளில் ஒருவரான புலிகளின் கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சு லாச்சப்பல் சோதியா கலைக் கல்லூரியில் நேற்று (27.08.2017) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 02.11.2007 அன்று கிளிநொச்சியில் வீரச்சாவடைந்த புலிகளின் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் ஏற்றிவைக்க, மலர்வணக்கத்தை 26.06.1989 அன்று ஓமந்தையில் இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவடைந்த கப்டன் ரூபன் அவர்களின் சகோதரி செய்து வைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, பிரான்சு புலிகளின் “தமிழர் ஒருங்கிணைப்புக்குழு” பரப்புரைப் பொறுப்பாளர் திரு.சத்தியதாசன், புலிகளின் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் ஆகியோர் கேணல் ராயு தொடர்பான நினைவுரைகளை ஆற்றியிருந்தனர். இந்நிகழ்வில், மாவீரர் நாள் 2017 இற்கான பங்களிப்பு அட்டையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.