Breaking News

அரசியல் நெருக்கடியில் பாடம் கற்காத அரசியல் தலைவர்கள்.!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முன்னாள் அரசியல் வைரியான மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து அரங்கேற்ற முயற்சித்த ' அரசியலமைப்புச் சதி' யின் தோல்வியில் இருந்து எமது நாட்டின் அரசியல் வர்க்கம் பெறுமதியான சில படிப்பினைகளைப் பெற்றிருக்குமென எதிர்பார்ப்பை எவராவது கொண்டி ருந்தால் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு அரசியல் தலைவர்களி னால் கடந்தவாரம் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைகள் நிச்சயமாக ஏமாற் றத்தையே கொடுத்திருக்கும்.

தற்போதைக்கு அமைச்சரவை உறுப்பினர் களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப் பட்டிருக்கின்ற போதிலும், ' தேசிய அர சாங்க ' முயற்சியொன்றின் ஊடாக அமைச் சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படு கின்றன என்பதில் சந்தேகமில்லை.

2015 ஜனவரியில் தனக்கு மக்கள் அளித்த பிரதான ஆணை ராஜபக்ச ஆட்சியை பதவி கவிழ்ப்பதே என்பதை ஜனாதிபதி சிறிசேன முற்றாகவே மறந்து விட் டார். ஆனால் நான்கு வருடங்கள் கூட முற்றாகக் கடந்து விடமுன்னரே தந் திரமான வழிவகைகளின் மூலமாக ராஜபக்சவை மீண்டும் பதவியில் அமர்த்த துணிந்து விட்டார்.

பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை அறிவித்த ஜனாதிபதியின் நட வடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகளும் ஏகமனதாக தீர்ப்பளித்தபோது இலங்கை யின் அதிகப்பெரும்பான்மையான மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார் கள் என்பதிலும் சந்தேகமில்லை.

புதிய பிரதமரும் அவரது அமைச்சர்களும் தங்கள் பதவிகளில் செயற்பட முடி யாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத்தடை உத் தரவு ராஜபக்சவுக்கும் சிறிசேனவுக்கும் பெரும் அவமானமாக அமைந்தது.

கடனைத் திருப்பிச்செலுத்துகின்ற சர்வதேச கடப்பாட்டை நிறைவேற்ற முடி யாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டு கிரேக்கம் அல்லது ஆர்ஜன்டீனாவின் அந்தஸ்துக்கு சென்றுவிடக்கூடிய ஆபத்துக்கு மத்தியிலேயே பதவியில் இருந்துவிலக ராஜபக்ச நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கணக்கு வாக்கு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கா விட்டால், அரசாங்கத்தின் முழுச்செயற்பாடுகளுமே ஸ்தம்பிதநிலைக்கு வந்தி ருக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு சட்டரீதியான முறையில் சம்பளத்தைக் கொடுக்கமுடியாமல்போயிருக்கும்.

அத்தியாவசிய சேவைகள் முடங்கிப்போயிருக்கும். ரணில் விக்கிரமசிங்க வுக்கு பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் ஆதரவளித்தால் கூட அவரைப் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும் அவருடன் தன்னால் பணியாற்ற முடியாது என்றும் ஆக்ரோஷமாகப் பேசிய ஜனாதிபதி சிறிசேன தான் கூறிய வார்த்தைகளைத் திரும்ப விழுங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அவரையே மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார்.

அந்த மாதிரியான பேச்சுக்கள் எல்லாம் நடைமுறைக்கு பொருந்தாதவை என்பதை முன்கூட்டியே ஜனாதிபதி உணர்ந்து நிதானமாகப் பேசப்பழகியி ருக்க வேண்டும். 2015 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால் தானும் தனது குடும்பத்தினரும் நிலத்தில் 6 அடிக்கு கீழேபோயிருப்போம் என்று உச்சத்தொனியில் அன்று கூறியவர் சிறிசேன.

அதே சிறிசேனதான் ஜனாதிபதி அரியாசனத்தில் அமருவதற்கு தனக்கு உத வியவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு ராஜ பக்சவை நியமித்துள்ளார்.

அரசியல் நெருக்கடியின்போது தங்களுக்கு ஆதரவாகத்திரண்ட மக்கள் தங்கள் மீது விரும்புகிறார்கள் என்றோ அல்லது கடந்த மூன்றரை வருடகால ஆட் சியின் செயற்பாடுகளை மெச்சுகிறார்கள் என்றோ விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சி ( அல்லது முன்னணி )யும் எந்தவிதமான மருட்சியையும் கொண்டிருக்கக்கூடாது.

இவ்வருடம் பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவு களின் மூலம் மக்கள் அரசாங்கத்துக்கு தெளிவாகக்கூறியிருந்த செய்தியை ஐ.தே.க. விளங்காமல் இருக்கமுடியாது.

அந்த தேரதலில் ராஜபக்சாக்களின் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெர முன பெற்ற மகத்தான வெற்றியே அடுத்த சுற்றுத் தேர்தல்களில் வெற்றி பெறக்கூடிய ' குதிரையாக ' நோக்கப்படுகின்ற மகிந்த ராஜபக்ச மீது பணத்தைக் கட்டுவதற்கு சிறிசேனவைத் தூண்டியது.

தவறான சட்டஆலோசனையின் கீழ் ஜனாதிபதி 2020 ஆகஸ்டில் நடத்த வேண்டிய பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே 2019 ஜனவரியில் நடத்த முடியும் என நம்பி பாராளுமன்றத்தைக் கலைத்தார். அது தவறானது என்று உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர்.

இப் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவாக வெளிக்காட்டப்பட்ட பொது அபிப் பிராயம் ஐ.தே.க.வுக்கு சார்பானதல்ல, ஜனநாயகத்துக்குச் சார்பானது. தங் களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி தங்களின் இறைமையை அப்பட்டமாக மீறுவதை மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.

ஜனாதிபதியாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டு உடனடியாக நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனக் கூறிய சிறிசேன இன்னும் ஒரு வருட காலத்திற்குள் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணை யைப் பெறுவதற்காக ராஜபக்சவின் உதவியை நாடி நிற்கிறார் என்பது தெளி வானது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக கொழும்பில் ஆற்றிய உரையில் மகிந்த ராஜபக்ச தனது எதிர்கால அரசியல் தந்திரோபாயம் எவ் வாறானதாக இருக்கும் எனபதற்கான சமிக்ஞையை தெளிவாகக் காட்டி யிருந்தார்.

ஐ.தே.க.வும் அதன் நேச அணிகளும் தங்களது அதிகார இருப்புக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதே தங்கியிருக்கின்றன அவர்கள் தமிழ் கட்சியின் பணயக்கைதிகளாக இருக்கிறார்கள் என்றும் அவர் அந்த உரையில் கூறியிருந்தார்.

கிராமப்புற பௌத்த சிங்கள பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்கு இருக் கிறது என்பதையும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன ஐ.தே.க.வின் வாக்கு வங்கியுடன் சிறுபான்மைச் சமூகங்களின் அமோக ஆதரவையும் பெற் றதன் காரணத்தினாலேயே தன்னைத் தோற்கடிக்கக்கூடியதாக இருந்தது என் பதையும் நன்கு தெரிந்துகொண்ட ராஜபக்ச இனவாதப் போக்கில் தனது பிர சாரங்களை முன்னெடுக்கத் தயங்கப்போவதில்லை என்பதற்கான அறிகுறி கள் தெளிவாகத்தெரிகின்றன.

அதிகாரத்துக்காக எதையும் அவர்கள் செய்வார்கள். கட்சி மாறுபவர்களின் பாராளுமன்ற ஆசனங்களைப் பறிப்பதன் மூலமாக கட்சித்தாவல்களுக்கு ஒரே யடியாக முடிவு கட்டவேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் கிளம் பியிருக்கின்றன.

கட்சித்தாவல்களை ஊக்குவிக்கும் கைங்கரியத்தை இரு பிரதான அரசியல் கட் சிகளுமே வெவ்வேறு காலகட்டங்களில் முன்னெடுத்திருந்தன. தொடர்ந்தும் அந்த வேலையைச் செய்துகொண்டேயிருக்கின்றன. கடந்த வாரங்களில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கூறப்பட்ட ' விலை 'யைக் கேள்விப்பட்ட நாட்டு மக்கள் மலைத்துப்போனார்கள்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய எந்த வழிமுறையையும், கொள்கை கோட்பாடு என்ற எதைப்பற்றியும் கிஞ் சித்தும் அக்கறைப்படாமல் கடைப்பிடிப்பதே இன்றைய அரசியலாகியுள்ளது.

தனது கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்தரப்புக்குச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

விக்கிரமசிங்கவுக்கு அல்லது அவரது அரசாங்கத்துக்கு எந்த வழியிலும் உதவுவதில்லை என்று கடுமையான மனநிலையில் சிறிசேன இருப்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது அரசாங்கம் கடுமையான சவால் களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்பது தெளிவு.

ஜனாதிபதியின் இந்த கடும் நிலைப்பாட்டின் விளைவாகத் தோன்றக்கூடிய முட்டுக்கட்டை நிலையை வெற்றிகொள்வதற்கு பிரதமரும் அரசாங்கமும் வகுக்கக்கூடிய தந்திரோபாயம் என்னவாக இருக்கும் என்பதே இன்று விடை வேண்டி நிற்கும் திடமான வினா.