Breaking News

மூன்று துருவங்களையும் ஒரே மேடைக்கு அழைக்கிறார்-குருபரன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியலில் போட்டியிடுகின்ற மூன்று பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் மூவரையும் பகிரங்க விவாதத்துக்கு அழைக்கவேண்டும் என கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில் இன்று யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர் சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கே சட்டத்தரணி குருபரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் அழைப்பு விடுத்த மூவரும் சட்டத்துறை சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தன்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுத் தேர்தல் பிரசாரக் காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஒரே மேடையில் பொது விவாதத்திற்கு வர வேண்டும். (சுமந்திரன் சேர், கஜேந்திரகுமார் அண்ணா மற்றும் விக்கினேஸ்வரன் சேர்)

அமெரிக்க சனாதிபதி வேட்பாளர்களுக்கிடையில் இடம்பெறும் விவாதம் போன்று இந்த விவாதத்தை அமைத்துக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் 5 நிமிடம் ஒதுக்கப்படும். (Opening statement). பின்னர் கேள்வி பதிலாக விவாதம் நடைபெறும். முடிவில் அனைவரும் 3 நிமிட நிறைவுறை (closing statement) தரலாம்.

ஒவ்வொரு கட்சியும் நேரடியாக தமது கட்சியுடன் சாராத ஆனால் தாம் நம்பும் ஒருவரை விவாத ஒருங்கிணைப்பு குழுவிற்கு பிரேரிக்க வேண்டும். இந்த மூவர் குழு சேர்ந்து கேள்விக் கொத்தை தயாரிக்க வேண்டும். பொது மக்களிடம் இருந்து கேள்விகளை கோரிப் பெற்று சேர்த்துக் கொள்ள ஏற்பாடு செய்யலாம்.

கேள்விகள் என்ன என்பது தொடர்பில் கட்சிகளுக்கு முன் கூட்டியே தெரியக் கூடாது. (கேள்விகள் லட்டு போல் இல்லாமல் பாகற்காய் போல் hard talk style இல் இருக்க வேண்டும். வெறும் rhetorical questions அறவே தவிர்க்கப்பட வேண்டும்) கேள்வி ஒரு கட்சியை நோக்கியதாக அல்லது பொதுவானதாக அமையலாம். கேள்விக்கு பதில் அளிக்க 5 நிமிடம். எதிர்வினையாற்ற 3 நிமிடங்கள். 2 அல்லது மூன்று மணி நேர விவாதமாக நடத்தலாம்.

விவாத ஒருங்கிணைப்புக் குழு விவாதத்தை கூட்டாக அல்லது அனைத்து வேட்பாளர்களும் உடன்படும் ஒருவரிடம் விடலாம்.

தயாரா? கேட்டுச் சொல்லுங்கள்.

என அவர் அழைப்பு விட்டுள்ளார் அதற்கு கஜேந்திரகுமார் தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளபோதும் சுமந்திரன்,விக்கினேஸ்வரன் போன்றவர்கள் இன்னமும் தயாராகவில்லை என்பதோடு கேள்விக்கணைகளை தயார் செய்யுமாறு சமூக ஆர்வலர்களிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.