Breaking News

வடக்கு, கிழக்கு தமிழரின் பூர்வீக தாயகமே இல்லை! - எல்லாவல மேத்தானந்த தேரர்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக தாயகம் இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே அவ்வாறான பிரகடனத்தைச் செய்தார்.' - இவ்வாறு கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர் தெரிவித்தார். 

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழர்களுக்கான பூர்வீக தாயகம் எங்குள்ளது. இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமத்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறிருக்கையில் தமிழர்களுக்கு என்று சொந்தமான பிரதேசங்கள் இல்லை. 

குறிப்பாக கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அது தமிழர்களின் பூர்வீக தாயகமாக எடுத்துக்கொள்ள முடியாது. கிழக்கிலங்கையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொல்பொருள் இடங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் பௌத்த, சிங்கள வரலாற்றுத் தொன்மங்களாகவே காணப்படுகின்றன. 

அங்கு தமிழர்களுக்கான பூர்வீக பகுதி எங்குள்ளது? சிங்களவர்களுடன் தமிழர்கள் வாழ்வதற்கு எங்குமே தடை செய்யப்படவில்லை. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிங்கள பெரும்பான்மையின படையினராலேயே பாதுகாக்கப்பட்டார்கள். 

கடந்த காலத்தில் தமிழர்களின் போராட்டக் குழுக்கள் அரங்கேற்றிய படுகொலைகளை மறந்துவிடவேண்டாம். அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர்கள் சிங்களப்படையினர்களே. 

ஆகவே, இலங்கையில் தமிழர்களுக்கென்று இல்லாத பூர்வீக தாயகத்தை இருக்கின்றது என்று கூறி இனவாதத்தையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்க முயல வேண்டாம்- என்றார்.