Breaking News

வடக்கு ஹர்த்தாலுக்கு எதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களால் இன்று (28) வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது ´வாழ விடு வாழ விடு – நிம்மதியாக வாழ விடு´, ´குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே´, ´அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா?´, ´மேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்´, ´நாம் ஹர்த்தாளை எதிர்க்கின்றோம்´, ´நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம்´, ´தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக?´ என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். 

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களின் உரிமை மறுப்பு மற்றும் நினைவேந்தல்களுக்கான தடை ஆகியவற்றை கண்டித்து தமிழ் கட்சிகளினால் இன்று பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச மக்களால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. 

அத்தோடு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுத்த பத்து தமிழ் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது ஆட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியும் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். 

தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காகவே இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கோரியுள்ளனர். ஆனால் மக்களின் தேவைகள் அதிகம் உள்ளது. இதற்கு முகம் கொடுக்காமல் மக்கள் மத்தியில் நிம்மதியினை குழப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றனர். 

எனவே, நாங்கள் அன்றாட தொழில் செய்து வரும் நிலையில் இவ்வாறு ஹர்த்தாலை போட்டு எங்களின் வயிற்றில் அடிக்காதீர்கள். இது தமிழ் அரசியல்வாதிகளின் இலாபத்திற்காக செய்வதால் எங்கள் இளைஞர்கள் இதில் திசை திருப்புவதற்கு வழிக்குக்கின்றது. இந்த அரசாங்கத்தின் மூலம் தாம் நிம்மதியாக வாழ்வதாகவும், எங்களுக்கு இந்த அரசாங்கம் பூரண ஆதரவாக உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். 

குறித்த பூரண ஹர்த்தால் எதிர்ப்பு போராட்டத்தில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ். தர்மலிங்கம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.