Breaking News

பாடும் நிலா எஸ்.பி.பி சற்றுமுன் காலமானார்! - பெரும் சோகத்தில் இரசிகர்கள்!

கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் உடல் நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. தென்னிந்திய திரை இசையை 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது அசாத்திய குரல் வளத்தால் ஆட்சி செய்த பாடும் நிலாவின் வாழ்க்கை பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. 

பிரிட்டிஷ் ஆட்சிகால மதராஸ் மாகாணத்தில் இடம்பெற்றிருந்த, தற்போதைய ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி. பாலசுப்பிரமணியம்..! 

எஸ் பி சம்பமூர்த்தி - சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை கிராமத்தில் பிறந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இளம் வயதிலேயே இசைமீது கொண்ட ஆர்வத்தால், ஹார்மோனியம் ,புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்கொண்டார். 

தந்தையின் ஆசைப்படி அனந்தபூரில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கு படிப்பை பாதியில் விட்டு சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பில் சேர்ந்த எஸ்.பி.பி படிக்கும் போதே இசை நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றார். 



1964 ஆம் ஆண்டு அமெச்சூர் பாடகர்கள் இணைந்து தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றதால் பலரது கவனத்தை ஈர்த்தார். 

ஆரம்பகாலத்தில் எஸ்.பி.பி நடத்திய மெல்லிசைக்குழுவில் ஹார்மோனியம் மற்றும் ஹிடாரிஸ்டாக இருந்த ராசையாதான் பின்னாளில் இசைஞானி இளையராஜாவானார். கங்கை அமரனும் இந்த குழுவில் ஹிடாரிஸ்டாக இருந்துள்ளார். 

1966 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமனா என்ற தெலுங்கு படத்தில் பி. கோதண்டபாணியின் இசையில் முதல் திரைப்பாடலை எஸ்.பி.பி பாடினார். அடுத்து தமிழில் எஸ்.பி.பி. பாடிய முதல் பாடல் இன்னும் திரைக்கு வராத ஓட்டல் ரம்பா படத்தில் இடம்பெற்றது. 

இந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு சாந்தி நிலையம் படத்தில் இயற்கை என்னும் இளைய கன்னிக்கு குரல் கொடுத்ததன் மூலம் தனது திரையிசை பயணத்திற்கு உயிர்கொடுத்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..! 

புரட்சிதலைவரின் அடிமைப்பெண்ணுக்காக ஆயிரம் நிலாவை வரவழைத்து கோடிக்கணக்கான ரசிகர்களை குரல்வளத்தால் கட்டிபோட்டவர் எஸ்.பி.பி. சிவாஜிகணேசனுக்காக பொட்டு வைத்த முகத்தை வர்ணித்த நேரம், உச்சத்துக்கு சென்றது எஸ்.பி.பியின் திரை இசை பயணம். முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ளாமல் தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் சங்கீத சாம்ராஜ்யம் நடத்திய எஸ்.பி,.பி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். 

1981 ஆம் ஆண்டு கன்னட இசையமைப்பாளர் உபேந்திரகுமார் இசையில் 12 மணி நேரத்தில் 21 புதிய பாடல்களை பாடி சாதனை படைத்தார். அதேபோல தமிழில் 19 பாடல்களும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடி சாதனை புரிந்தவர் எஸ்.பி.பி. முதன் முதலாக இந்தியில் எக்துஜே கேலியே படத்தில் பாடிய பாடலுக்கு தேசிய விருது வென்ற சாதனையாளர் பாடும் நிலா பாலசுப்பிரமணியம். 

சங்கராபரணம் தொடங்கி மின்சாரகனவு வரை 6 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ள எஸ்,பி,பி, ஆந்திர அரசின் நந்தி விருதை 25 முறையும் தமிழக, கர்நாடக அரசுகளின் விருதுகளையும் ஏராளமான முறையும் பெற்றுள்ளார். திரை இசையில் இவர் செய்த சாதனை மற்றும் சேவைக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. 

தென்னிந்திய திரை இசையில் இளையராஜா, எஸ்.பி.பி. எஸ். ஜானகி கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணி என்பதற்கு ஹிட்டான ஆயிரக்கணக்கான பாடல்களே சாட்சி..! 

பாலசுப்பிரமணியம் பாடகராக மட்டுமல்ல இசையமைப்பு, பின்னணி குரல், நடிகர் , சினிமா தயாரிப்பு, மேடைக் கச்சேரி என ஆல்ரவுண்டராக சிகரம் தொட்டவர் ,கமல்ஹாசனுக்கு மட்டும் 120 தெலுங்கு படங்களில் எஸ்.பி.பி பின்னணி குரல் கொடுத்துள்ளார். நடிகர்களின் குரலுக்கு கேற்ப தனது குரலை மாற்றி பாடுவதில் வல்லவரான எஸ்.பி.பி, உற்சாகப்பாடல்களுக்கு இணையாக சோக பாடல்களையும் உணர்ச்சி பொங்க பாடி ரசிகர்களின் உணர்வுகளோடு கலந்தவர். 



காதல் திருமணம் செய்து கொண்ட எஸ்.பி பாலசுப்பிரமணியத்துக்கு, சாவித்திரி என்ற மனைவியும் எஸ்.பி.பி சரண் என்ற மகனும், பல்லவி என்ற மகளும் உள்ளனர். பல்வேறு உலக நாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தி உலக ரசிகர்களை எல்லாம் தனது பாடல்களால் மகிழ்வித்து வந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

74 வயதாகும் நிலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பாடல்களால் பலரது சோகத்திற்கு மருந்திட்ட எஸ்.பி.பி தனது மரணத்தால் ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுள்ளார். 

பாடும் நிலா பாலு உடலால் மறைந்தாலும் அவரது ஆயிரக்கணகான பாடல்களால் ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்..!