உடலில் வளரும் கொழுப்பு கட்டிகளால் ஆபத்தா? - THAMILKINGDOM உடலில் வளரும் கொழுப்பு கட்டிகளால் ஆபத்தா? - THAMILKINGDOM

  • Latest News

    உடலில் வளரும் கொழுப்பு கட்டிகளால் ஆபத்தா?

     


    உடலில் வளரும் கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகள், சாதாரண கட்டிகள் என இரண்டு வகை உண்டு. சாதாரண கட்டிகள் பொதுவாக எப்போதும் வலிப்பதில்லை. புற்றுநோய்க் கட்டிகள் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருக்கும். பின்னர், திடீரென்று வலிக்க ஆரம்பிக்கும். அப்போது கட்டியின் நிறம் மாறுவது, அளவு கூடுவது, உடல் எடை குறைவது, பசி குறைவது போன்ற துணை அறிகுறிகளையும் ஏற்படுத்துவது உண்டு. சாதாரண கட்டிகளில் கொழுப்பு கட்டி, நார்க்கட்டி, நீர்க்கட்டி, திசுக்கட்டி எனப் பலவிதம் உண்டு. கட்டி எந்த வகை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது பொதுவாக, தோலுக்கும் தசைக்கும் இடையில் வளரும். மிக மிக மெதுவாகவே வளரும். மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும். உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங்களில் இவை ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம்.

    கொழுப்பு கட்டி வளர்வதற்கான சரியான, தெளிவான காரணம் இன்றுவரை உறுதிப்படவில்லை. என்றாலும் பரம்பரை தன்மை, அதிகக் கொழுப்பு உணவு சாப்பிடுவது, உடல் பருமன், கட்டுப்படாத நீரிழிவு, மது அருந்துதல் போன்றவை இக்கட்டிகள் உருவாவதைத் தூண்டுகின்றன என்பது மட்டும் அறியப்பட்டுள்ளது. கட்டி வந்ததும் அதைக் குடும்ப மருத்துவரிடம் ஒரு முறை காண்பித்து, அது கொழுப்பு கட்டிதான் என்று உறுதி செய்துகொண்டு, அதை அப்படியே விட்டுவிடலாம். அகற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு வேறு சிகிச்சைகளும் தேவையில்லை. சாதாரண கட்டியை ஒருமுறை அகற்றி விட்டால், அந்த இடத்தில் மறுபடியும் அது வளராது.

    கட்டி திடீரென வேகமாக வளர்கிறது, அதன் வடிவம் மாறுகிறது, வலிக்கிறது, கட்டியின் மேல் பகுதி சருமத்தின் நிறம் மாறுகிறது, கட்டி உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது, கட்டிக்கு அருகில் உள்ள பகுதியில் நெறி கட்டுகிறது என்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அது புற்றுநோய்க் கட்டியா, இல்லையா எனப் பரிசோதித்துத் தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: உடலில் வளரும் கொழுப்பு கட்டிகளால் ஆபத்தா? Rating: 5 Reviewed By: Thamil
    Scroll to Top