மஹிந்த இன்னமும் சுதந்திரமாக வெளியே நடமாட காரணம் என்ன? - சஜித் கேள்வி ! - THAMILKINGDOM மஹிந்த இன்னமும் சுதந்திரமாக வெளியே நடமாட காரணம் என்ன? - சஜித் கேள்வி ! - THAMILKINGDOM

 • Latest News

  மஹிந்த இன்னமும் சுதந்திரமாக வெளியே நடமாட காரணம் என்ன? - சஜித் கேள்வி !

   


  அமைதியாகவும், நாகரீகமாகவும் போராட்டம் மேற்கொண்ட ஜோசப் ஸ்டாலின் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களை தண்டனைக்குட்படுத்தி கைது செய்வதற்கும், தற்போதைய வன்முறை சார் அடக்குமுறையின் முன்னோடியான மஹிந்த ராஜபக்ஸ இன்னமும் சுதந்திரமாக வெளியே நடமாடுவதற்குமான காரணம் என்ன எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.


  உழைக்கும் மக்களுக்காகவும், ஆசிரியர் சமூகத்திற்காகவும் போராடிய ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள போது, அடக்குமுறையின் தந்தையான மஹிந்த ராஜபக்ஸ ஆரோக்கியமாக பொழுதை கடத்திக்கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

  மனிதநேயத்தின் பெயரால் நாடு குறித்து சிந்தித்து ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய தருணத்தில், எதேச்சதிகாரமாக அரசியல் பழிவாங்கள்களில் ஈடுபடுவதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

  கைது செய்யப்பட்டுள்ள தொழிற்சங்க தலைவர் திரு.ஜோசப் ஸ்டாலினை பார்வையிடுவதற்காக இன்று (04) கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஜோசப் ஸ்டாலின் தொடர்பில் கூறியிருந்ததை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அன்று அவர் கைது செய்யப்பட்ட போது ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை இழக்க நேரிடும் என்று கூறியிருந்தால், இன்று அது அவ்வாறு இழக்கப்படாதா எனவும் கேள்வி எழுப்பினார்.

  வெடிகுண்டுகள், வாள்கள்,துப்பாக்கி ரவைகள் போன்ற ஆயுதங்களால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போது வரை தொடரும் வன்முறைச் சுழற்சியை ஆரம்பித்தது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவே எனவும் தெரிவித்தார்.

  எந்தவொரு குடிமகனும் தான் கருதும் கருத்தைக் கொண்டிருப்பதற்கும், அதற்காக முன் நிற்கவும், பேசவும், ஒன்று கூடவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும் உரிமையுண்டு என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வன்முறையற்ற அகிம்சை வழியில் போராடும் உரிமையை யாராலும் மீற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

  ஜோசப் ஸ்டாலின் தனக்குள்ள உரிமைகளை நாட்டுக்காக ஜனநாயக முறையில் பயன்படுத்தினார் எனவும், அந்த உரிமையை எவராலும் எதிர்க்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மஹிந்த இன்னமும் சுதந்திரமாக வெளியே நடமாட காரணம் என்ன? - சஜித் கேள்வி ! Rating: 5 Reviewed By: news
  Scroll to Top