Breaking News

ஆளும் கட்சிக்குள் பிளவு; கட்சி உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பில் மஹிந்த!?

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று பிற்பகல் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் எதிர்காலம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அதிபர் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக, அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அண்மையில் கசினோ தொடர்பான கட்டளைச்சட்டம் மீதான வாக்கெடுப்புகளை ஆளும் கூட்டணியின் 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர். அத்துடன், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச போன்றோர், அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்றுள்ளதாகவும், பதவி விலகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் நடக்கவுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய சம்மேளனக் கூட்டத்தில், விமல் வீரவன்ச எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிலங்கா அதிபர் இந்த அவசரக் கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளார்.

அதேவேளை, ஊவா மாகாண சபையின் உறுப்பினர்கள் மற்றும் ஊவா மாகாணத்தில் உள்ள தொகுதி அமைப்பாளர்களினது கூட்டத்துக்கும் சிறிலங்கா அதிபர் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்துள்ளார். ஊவா மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பர். இந்தக் கூட்டத்தின் பின்னர், ஊவா மாகாணசபையைக் கலைத்து தேர்தலை நடத்துவது குறித்து சிறிலங்கா அதிபர் முடிவெடுக்கவுள்ளார்.