Breaking News

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை விசாரிக்க 13 பேர் கொண்ட ஐ.நா விசாரணைக்குழு

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்
மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நியமிக்கவுள்ள விசாரணைக் குழுவில் குறைந்தபட்சம் 13 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைக் குழுவை இரண்டு நிபுணர்கள் மேற்பார்வை செய்யவுள்ளனர். அவர்களில் ஒருவர், அனைத்துலக அளவில், பிரபலமான உயர்மட்ட பிரமுகராக இருப்பார்.

இந்த விசாரணைக் குழுவில், டிஜிட்டல் சான்றுகளை ஆய்வு செய்வதற்கான தடயவியல் நிபுணர்களும் இடம்பெறவுள்ளனர். இவர்கள், அடுத்த எட்டு மாதங்களில் சாட்சிகளை சேகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களைப் பெறவும், ஏனைய தகவல் மூலங்களைப் பெற்று, தமது கண்டறிவை முழுமைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கும், ஆசிய பசுபிக். வடஅமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இந்த விசாரணைக் குழு அடுத்த வாரங்களில் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விசாரணைக் குழுவில் இடம்பெறும் இரண்டு நிபுணர்கள், உயர்மட்ட நிபுணத்துவத்தைர் வழங்கவும், விசாரணைகளை வழிநடத்தவும், பகுப்பாய்வு செய்யவும், அறிக்கையை தயாரிக்கவும், பத்து மாதங்களுக்கு நலன்சார் அடிப்படையில் பணியாற்றவுள்ளனர் என்று சிறிலங்கா விசாரணைக்கான பூர்வாங்க வரவுசெலவுத் திட்டம் மற்றும் பணியாளர்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்றும், ஆனால் விசாரணை அறிக்கை, இரண்டு நலன்சார் நிபுணர்களின் முத்திரையுடனேயே வெளியிடப்படும். 

இவர்களில் ஒருவர் மிகவும், உலக அரங்கில் மிகவும் மூத்த பிரமுகர் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விசாரணைக்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் கோபி அன்னான் விசாரணைக் குழுவுக்குத் தலைமையேற்கலாம் என்று ஊகங்கள் வெளியாகியுள்ளன. எனினும், அணுகப்பட வேண்டிய மூத்த நிபுணர்களின் பட்டியல் ஒன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்திடம் இருப்பதாக அறியப்படுகிறது. மைக்கல் கிர்பி அல்லது கோபி அன்னான் போன்ற- அனைத்துலக அளவில் உயர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் இருக்க வேண்டும் என்று எமக்குத் தெரியும் என, விசாரணைக் குழு அமைப்புடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.