Breaking News

அரசு பள்ளிகளில் நோட்டுப்புத்தகம்–சீருடை இன்று விநியோகம்

கோடை வெயில் இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைத்தது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் கூட வெயிலின் தாக்கம் குறையவில்லை. சென்னை உள்ளிட்ட அநேக மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி தாண்டி, கொளுத்தியது. இதனால் பள்ளிக்கூடங்கள் திறப்பது தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 2–ந் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருந்தது. பள்ளிக்கூடம் திறக்க கூடிய நாளில் மாணவ–மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை ஆகியவற்றை வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

திட்டமிட்டப்படி அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டன. மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றார்கள். முதல் வகுப்பு மற்றும் எல்.கே.ஜி. வகுப்பு குழந்தைகள் புதிதாக பள்ளிக்கு சென்றதால் அழுது கொண்டே இருந்தன. ஒரு சில குழந்தைகள் பெற்றோர்களை விட்டு பிரியாமல் முரண்டு பிடித்தன. அவர்களை ஆசிரியைகள் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். 

தங்கள் குழந்தைகள் முதன் முதலில் பள்ளிக்கு செல்வதை ஒவ்வொரு பெற்றோரும் கண்டு மகிழ்ந்தனர். அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு மட்டும் இலவசமாக பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், மற்றும் சீருடை வழங்கப்படுகிறது. 1 முதல் பிளஸ்–2 வரை படிக்கும் ஒரு கோடி மாணவ–மாணவிகளுக்கு அரசு சார்பில் பாடப்புத்தகங்கள் இலவசமாக இன்று வழங்கப்பட்டன. 81 லட்சம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை ஆகியவை விநியோகம் செய்யப்பட்டன. 

பள்ளி திறக்கப்படும் நாளில் பாடப்புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் சீருடை வழங்கும் வகையில் ஏற்கனவே அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித்துறை மூலம் அனுப்பப்பட்டு இருந்தன. தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவ–மாணவிகளுக்கு அரசின் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன. சென்னையில் விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, செயலாளர் சபீதா ஆகியோர் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அரசின் இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகளை மாணவ–மாணவிகள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.