Breaking News

கவிஞர் வைரமுத்து அவர்களுடனான நேர்காணல்


மிழுக்குப் புது நிறம் கொடுத்தவர். வசீகரச் சொற்களால்
தமிழன்னையின் ஆடையை மட்டுமல்ல; அவளையே புதிதாக்கியவர். இவர், வியப்புக் காடாய் விரியும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்.


இவரது திரைப்பாடல்கள், வறண்ட செவிகளையும் இலக்கிய மழையில் நனைத்து,அவைகளுக்கு ருசி உணர்வை உண்டாக்கின. இவரது "தண்ணீர் தேசம்', "கருவாச்சி காவியம்', "மூன்றாம் உலகப்போர்' போன்ற ஆக்கங்கள், வாழ்வியலிலின்மீது கொண்ட அக்கறையால் உருவான உன்னதப் புதினங்களாகும்.இவரது காந்தக்குரலும், மேன்மைமிகும் மேடைகளில் கவித்துவமாய்த் தமிழை ஆண்டு கொண்டிருக்கிறது."கள்ளிக்காட்டு இதிகாசம்' படைப்புக்காக "சாகித்ய அகாடமி' விருதையும், திரைப்பாடல்களுக்காக ஆறுமுறை தேசிய விருதுகளையும் பெற்ற இவரைத்தேடி, இந்த ஆண்டு பத்மபூஷண் விருதும் பரவசமாய் ஓடிவந்தது. நோபல் பரிசை நோக்கி நகரும் இவரது இலக்கியப் பயணம், கம்பீரம் இழக்காமல் களைகட்டிக் கொண்டிருக்கிறது.முத்தமிழறிஞர் கலைஞரோ, பிரமிப்புகளைத் தேக்கி வைத்திருக்கும் தமிழின் பிரபஞ்சப் பெருவெளி. 91-ஐத் தொடும் கலைஞரை உளமார வாழ்த்துவது இலக்கிய உலகின் இதயப்பூர்வமான கடமை.அவ்வகையில், கலைஞரின் காதலுக்குரியவராகவும் கலைஞரின் ஆத்மார்த்தமான இலக்கிய நண்பராகவும் திகழும் கவிப்பேரரசரை, கலைஞரைக் குறித்த கேள்விகளோடு சந்தித்தோம்.கேள்விகளைக் கேட்ட நொடியிலேயே, கவிப்பேரரசின் வாயிலிலிருந்து வார்த்தைகள் கவித்துவமாகப் பிரவாகமெடுத்தன. வார்த்தைகள் பூக்களாய் மலர்ந்தன. அவற்றில் நறுமணம் கசிந்தது.இருபது நிமிடம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட நேர்காணல், உணர்ச்சியின் உத்வேகத்தால் முக்கால் மணி நேரத்துக்கும் மேலாய் நெகிழ்வாய் நீண்டது.வைக்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும், உற்சாகமாகவும் கம்பீரமாகவும் விடைதந்தார்.வரும் ஜூலை 13-ல் மணிவிழா காண இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் சிகரப் பேட்டி இதோ....


கலைஞர் என்ற சொல்லைக்கேட்ட மாத்திரத்தில் உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் என்ன?வேறு எந்தத் தனிமனிதருக்கும் அல்லது தலைவருக்கும் இல்லாத ஒரு பேராற்றல் கலைஞரிடம் இருப்பதைப் பார்த்து நான் திகைக்கிறேன். எழுத்து, சொல், செயல், இந்த மூன்றிலும் செப்பம்- மூன்றிலும் ஒரு நுட்பம்- மூன்றிலும் ஒரு தனி பாணி- இந்த மூன்றும் இயைந்து நிற்கும் பேராற்றல் கலைஞரிடம் இருப்பதுபோல், சமகாலத்தில் யாரிடமும் நான் கண்டு வியந்ததில்லை. மேலும் கலைஞரை அவரது தீராத உழைப்பில் நான் வியக்கிறேன். 

கலைஞரின் இலக்கிய சாதனைகள் குறித்து?தமிழ் இலக்கியம் என்பது புலவர்களுக்கு, பண்டிதர்களுக்கு மேட்டுக்குடி மக்களுக்கு அல்லது புலமையின் பொழுதுபோக்குக்கு என்று இருந்த நிலையை முதலில் மாற்றியவன் மகாகவி பாரதி. அதற்குப் பிறகு தமிழ் இலக்கியத்தை வீதிக்குக் கொண்டுவந்தது திராவிட இயக்கம். அப்படி வீதிக்குக் கொண்டுவந்த முதல் மனிதர்; பேச்சால் அண்ணா. எழுத்தால் அண்ணா. திரையுலகில் அண்ணா. இதைத் தொடர்ந்து முழுமைசெய்தவர் கலைஞர்.தமிழ், இன, மொழி அடையாளங்களை மீட்டெடுத்ததில் அவருடைய பங்கு அளப்பரியது. சிலப்பதிகாரத்தை அவர் நவீனப்படுத்தியபிறகுதான் தமிழனுக்கென்று ஒரு மகாகாவியம் உண்டு என்பதைத் தமிழனம் உணர்ந்தது. தமிழினத்திற்கு வெளியேயும் அது உணரப்பட்டது. சங்க இலக்கியத்தை எளிமை செய்தல், பழைய மரபுகளை மீட்டெடுத்தல் என அவரது தேர் ராஜபாட்டையில் நகர்ந்தது.தொல்காப்பியத்திற்கு உரையாக, தொல்காப்பியப் பூங்கா என கவிதை வடிவில் அவர் எழுதியதையும் நான் பெரிதும் வியக்கிறேன். ஏனென்றால் தொல்காப்பியம் என்பது புலவர்களால்கூட தொடமுடியாத உயரத்தில் இருப்பது.இலக்கணம்போல் ஓர் இலக்கியம் என்று சொல்லவேண்டும் தொல்காப்பியத்தை. இலக்கியம்போல் ஓர் இலக்கணம் என்று சொல்லவேண்டும் திருக்குறளை. இந்த இரண்டுக்கும் அவர் எழுதிய உரைகள் பொதுமக்கள் மத்தியில் அவைகளைக் கொண்டு சென்றன. இந்தப் பெருமை கலைஞருக்குதான் உண்டு. புலவர்களும் பண்டிதர்களும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் இந்தப் பணியை ஆற்றியிருந்தால் அது மாணவர்களை மட்டுமே சென்று அடைந்திருக்கும்! மாணவர்களைத் தாண்டி மக்களை இவை சென்று அடைய வேண்டுமென்றால் அதற்கு முகம் வேண்டும். அந்த முகம் கலைஞருக்கு இருந்தது. அதை எடுத்துச் சொல்லும் திறன் வேண்டும். அந்தத் திறன் கலைஞருக்கு இருந்தது. அதை எடுத்துச் சொல்ல ஒரு தளம் வேண்டும். அந்தத் தளமும் இயக்கம் என்ற பீடமாகக் கலைஞருக்கு அமைந்தது. இது எல்லாருக்கும் வாய்க்காது. பிறகு, திரையுலகில் அவர் எழுதிய வசனங்களை அசை பிரித்தால் புதுக்கவிதை என்று சொல்லத்தோன்றுகிறது. அவருடைய பழைய பராசக்தியையும் பழைய மனோகராவையும் திரும்பிப் பார்த்தால் அங்கே புதுக்கவிதை வீச்சுக்களை நம்மால் காணமுடிகிறது. கலைஞருடைய வசனங்களில்ஊளைச்சதையற்ற வார்த்தைகளை நான் பார்த்தேன். அலங்காரங்கள்கூட அர்த்தத் தோடு இருக்கவேண்டும்.அடைமொழியை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது என்று கவிஞர் சுரதா சொல்லுவார். தாமரை என்று சொல். செந்தாமரை என்று சொல்லுகிறபோது சிவப்பு என்ற அடையை அனாவசியமாகப் பயன்படுத்தாதே என்று அவர் சொல்லுவார். அடைமொழியைக்கூட அளந்து, அர்த்தத்தோடு பயன்படுத்திய ஆற்றல் கலைஞரிடம் உண்டு. என்றைக்கோ அவர் எழுதிய உரைநடைகள் இன்றைக்கும் எடுத்தாளப்படுவது ஆச்சரியமில்லையா?தமிழ் இலக்கியத்தில் வெண்பாக்களும் விருத்தங்களும் பழமொழிகளும் மேற்கோள் காட்டப்படுவது இயல்பு.எந்த ஒரு மேற்கோள் வடிவமானாலும் அது செய்யுள் என்ற பாத்திரத்திற்குள் செப்பமாக உட்கார்ந்திருக்க வேண்டும். செய்யுள் என்ற பீடத்தில் இருக்கிற அல்லது யாப்பு என்ற கட்டமைப்பில் இருக்கிற சொற்களை மட்டும்தான் தமிழன் மேற்கோள் காட்டுவான். முதன்முதலில் உரைநடை மேற்கோள்காட்டப்பட்டது என்றால் அது கலைஞருடைய உரைநடைதான். "ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்' என்று கலைஞர், பராசக்தியில் எழுதினார். பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தின் உயரமான பெண்ணும், உயரமான பெண்களில் துயரமான பெண்ணுமான டயானா இறந்தபோது, ஒரு பத்திரிகை அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டது "ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்' என்று.எழுதப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பின்னும், ஒரு உலக நிகழ்வுக்குத் தலைப்பாக அமையக்கூடிய எழுத்து கலைஞரின் எழுத்து. அது ஆச்சரியமில்லையா? இன்னும் சொல்லலாம். அவர் ஆற்றல் ஒரு பேட்டிக்குள் முடிகிற பொருளல்ல, ஒரு கிளிஞ்சல் கொண்டு கடலை இறைத்துவிட முடியாது. 


ஒரு திரைப்படப் பாடலாசிரியராக இருந்து, கலைஞரின் திரைப்பாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?கலைஞர், திரைப்படப் பாடல்களை அளந்து எழுதியிருக்கிறார். அதிலும் அழகாக எழுதியிருக்கிறார். எண்ணிக்கையில் குறைவாக எழுதியிருக்கிறார். ஆனால் எண்ணங்களில் வலிமையாக எழுதியிருக்கிறார்."பூமாலை நீயே', பாடலில் நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வத்தைக் கொண்டு வந்து, திராவிட இயக்க முத்திரையைப் பதித்திருக்கிறார். வசனங்களில் தனது சமகாலத் தோழர்களின் பெயர்களைப் பதிவு செய்து பாசத்தைக்காட்டியிருக்கிறார். சேரன் செங்குட்டுவன் வசனத்தில், "அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள். ஆசைத்தம்பி இளங்கோ உன்னை இகழ்ந்தார்கள். நெடுஞ்செழியப் பாண்டியரே உன்னை இகழ்ந்தார்கள், என்றெல்லாம் தன் சமகாலத் தோழர்களை இலக்கியத்திற்குள் கொண்டுவரும் பெருந்தன்மை அவருக்கு இருந்தது. அதே பாணியைத்தான் நான் முன்னர் தொட்டுக்காட்டிய "பூமாலை நீயே' பாட்டில் கையாண்டார். அவருடைய பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது "வாழ்க்கை எனும் ஓடம்' ஆகும். அது பாட்டல்ல. பாடம்.' ஒருமுறை சில அரசு அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். எய்ட்ஸ் தடுப்பு குறித்து சில வரிகள் எழுதித்தர முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள். நான் சொன்னேன்... "கலைஞரை முதலமைச்சராக வைத்துக்கொண்டு என்னிடம் வந்து இதற்கு வரிகள் கேட்கிறீர்களே, அவர் எழுதிய வரிகளே பொருத்தமாக இருக்குமே. வருமுன் காப்பவன்தான் அறிவாளி அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி என்ற கலைஞரின் வரிகளை எழுதிக் கொள்ளுங்கள்' என்றேன். சிரித்துக்கொண்டே எழுதி வாங்கிக்கொண்டு போனார்கள். இப்படி எல்லாத் துறைகளுக்கும் இவரது பாட்டு பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. காஞ்சித்தலைவனில் ஒரு பாட்டு எழுதியிருப்பார்.
"மகிமைகொண்ட மன்னரின் மீது எதிரிகளின் கால்கள்! 
மலர் பறிப்ப தில்லையடா வீரர்களின் கைகள்'இவையெல்லாம் தமிழனுக்கு உணர்ச்சி கொடுத்த உயிர்ப்பான வரிகள்- குறைவாக எழுதினாலும் நிறைவான கருத்துக்களோடு திகழுகின்றன கலைஞருடைய பாடல்கள்.

கலைஞரை எப்போது, எந்த வயதில் எவ்விதமாக அறிந்தீர்கள்? அவரை எப்போது முதன்முதலாகச் சந்தித்தீர்கள்?கலைஞரை நான் உணர்ந்துகொண்டது சின்ன வயதில். எனக்கு அப்போது பன்னிரண்டு பதின்மூன்று வயதிக்கும்! என் சித்தப்பா பாண்டித்தேவர், பெரியகுளத்தில் இருந்து வாங்கி வந்த பராசக்தி வசனப் புத்தகம் அந்த வயதில் என் மடியில் விழுகிறது. பராசக்தி வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். கலைஞர் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றுத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தபோது நான் இரண்டுநாள் குழந்தை. நான் பிறந்து பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள், தமிழ்ச் சமூகத்தில் "பராசக்தி' ஊடறுத்துப் பயணம் செய்துகொண்டிருந்தது. ஐம்பது அறுபதுகளில் பிறந்த, படிக்கத்தெரிந்த கலைஞர்கள் அனைவரும் கலைஞரின் "பராசக்தி', "மனோகரா'வில் மனம் பறிகொடுக்காமல் இருந்திருக்க முடியாது. அன்றைக்கிருந்த தலைமுறைக்கு ஒரு தமிழ் ஊட்டம் கிடைத்தது என்று சொன்னால் அது கலைஞரின் வசனங்களால்தான்.கலைஞரின் விரலும் சிவாஜியின் குரலும்- இந்த இரண்டும் இல்லையென்றால் தமிழனுக்குக் காதுகளின் வழியாகத் தமிழ் பாய்ந்திருக்காது. "இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்ற பாரதியின் பாடலுக்கு கலைஞரும் சிவாஜியும்தான் உரையெழுதியவர்கள்.கலைஞரின் தமிழை சிவாஜியின் குரலில் கேட்ட தமிழ்நாடு சிலிர்த்தது. அப்படி அறிந்தபோது யார் கலைஞர் என்ற சின்ன வயதுக் கேள்வி எனக்குள் வளர்ந்தது. நான் வளர வளர அவர்மீது ஒரு பற்று வளர்ந்தது. கலைஞர் யார்? எப்படி இருப்பார்? என்ற எண்ணம் எனக்குள் ஓடியது. "ஆறுமாதக் கடுங்காவல்' என்று ஒரு புத்தகம் அப்போது வந்தது. அதில் மீசைமுளைக்காத கலைஞரின் சின்ன வயதுப்படம் பிரசுரமாகியிருந்தது.  நான் ஆசையாக அவருக்கு  மீசை வரைந்து பார்த்தேன். அந்தப் படம் இன்றும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அண்ணா மறைந்த போது அவர் இரங்கல் கவிதை ஆற்றினார். அப்போது நான் பள்ளி மாணவன். எங்களூர்த் திடலில், அங்கிருந்த பஞ்சாயத்து வானொலி யின் கீழே ஊரே கூடியிருந்தது. கலைஞரின் கவிதையை அழுதுகொண்டே கேட்டோம். அந்தக் கவிதையின் தாக்கம் கலைஞரை என் இதயத்தின் மையத்தில் கொண்டுவந்து இருத்தியது.அவரை நான் முதன்முதலாகப் பார்த்தது; பச்சையப்பன் கல்லூரியில் நான் படிக்க வந்தபோதுதான். 71-ல் நான் பி.யூ.சி படித்தபோது அவர் முதலமைச்சர். அப்போது பச்சையப்பன் கல்லூரியில் புலவர்கள் மாநாடு நடந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை, எந்த மாணவரும் வரவில்லை. புலவர்களும் அறிஞர்களும் வந்திருந்தார்கள். நான் ஒருவன் மட்டுமே மாணவன். கூட்டமற்ற கூட்டம் அது. அங்கே கலைஞர் கம்பீரமாக  நடந்து வந்தார். நான் அவரைத் திரும்பிப்பார்க்கிறேன். அதுதான் அவர்மீது நான் பதித்த முதல் பார்வை. மேடையில் அமர்ந்தார். சொற்பொழிவு செய்தார். அந்த விழாவில் புலவர்களுக்கு ஒரு பை  வழங்கப்பட்டது. பையில் ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை என்றார்கள். கலைஞர் சொன்னார், புலவர்கள் வெறும் பையோடும் வெறும் கையோடும் போகக்கூடாது. அவர்களுக்கு நிதி வழங்குகிறேன் என்று ஒவ்வொரு பையிலும் 100 ரூபாய் இட்டு வழங்கச் செய்தார். கலைஞர் புறப்பட்டார். அப்போது அவர் பின்னாலேயே சென்று கார் கதவை அடைத்தேன். காவலர்கள் நின்றார்கள்.  தள்ளி நின்றுகொண்டேன். நான் வணங்கினேன். அவர் புன்னகைத்தார். நான் யார் என்று அப்போது அவருக்குத் தெரியாது. அவரின் அன்றைய புன்னகை இன்னும் என் இதயத்தின் அலமாரியில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.


கலைஞர் உங்கள்மீது வைத்திருக்கிற அக்கறை பற்றியும் நீங்கள் அவர்மீது வைத்திருக்கும் அக்கறை பற்றியும் சொல்லுங்கள்? இது மிகவும் உணர்ச்சிகரமான உணர்வை ஏற்படுத்தும் கேள்வி. அவர் என்மீது வைத்திருக்கிற அக்கறையைப் பார்த்து திகைத்து நெகிழ்கிறேன். அவர்மீது நான் வைத்திருக்கும் அக்கறை இயல்பானது. ஒருமுறை நான் அவரிடம் சொல்லிவிட்டு இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம்போனேன்.இந்தோனேஷியாவில் விமான நிலையத்திற்கு நாங்கள் வந்தோம். அங்கே நானும் நண்பர் சிங்கப்பூர் முஸ்தபாவும் இந்தோனேஷியாவின் "கருடா' விமானத்தில் பயணம் செய்யப் பயணச்சீட்டு பெற்றுக்கொண்டோம். ஜகார்த் தாவில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணம். முஸ்தபாவின் உதவியாளர் மாலிக் சொன்னார். ஏன் இந்த விமானத்தில் போகிறீர்கள்.  இது பழைய விமானம். அதிலும் இது ஒன்றரை மணிநேரம் கழித்துத்தான் புறப்படும். அதற்கு முன்னால் சிங்கப்பூர் விமானமான "சில்க் ஏர்' (நண்ப்ந் ஆண்ழ்) இன்னும் 20 நிமிடத்தில் புறப் படப் போகிறது. அது புத்தம் புது விமானம்என்றார். பயணச்சீட்டை மாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே சீட்டை ரத்து செய்துவிட்டு அந்த விமானத்துக்கு ஏற்பாடு செய்யட்டுமா என்றார்.  ஏற்பாடு செய்யுங்களேன் என்றார் என் நண்பர் முஸ்தபா. நான் சொன்னேன். "போர்டிங் பாஸ்' வாங்கியாகிவிட்டது. ஒரு மணி நேரம் தாமதித்துப்போனால் தப்பில்லை. அதுவரை பேசிக் கொண்டிருப்போம் என்றேன். உதவியாளர் மாலிக் எங்களை முன்னால்சென்று வரவேற்க அந்த விமானத்தில் புறப்பட்டுப் போய்விட்டார். நாங்கள் ஒரு மணிநேரம் கழித்து இந்தோனேஷிய விமானத்தில் புறப்பட்டோம். போய் இறங்கினோம். மாலிக் எங்களை வரவேற்க வந்திருக்கவில்லை. எங்காவது தேநீர் விடுதியில் இருப்பாரோ என்று தேடினோம். கிடைக்கவில்லை. சற்று நேரத்தில் சிங்கப்பூர் விமானம் தொடர்பு எல்லையில் இல்லை என்று எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. ஒருவேளை அது மலேசியா சென்றுவிட்டு இங்கு வருமோ என்ற ஐயத்தில் நாங்களிருந்தோம். சற்று நேரத்தில் விமானம் காணக்கிடைக்கவில்லை என்ற தகவல் வந்தது. அஞ்சினோம். கொஞ்ச நேரத்தில் விமானம் எங்கோ விழுந்துவிட்டது என்று சொன்னார்கள். அடுத்த நாற்பது நிமிடத்தில் கடலில் விமானத்தின் உதிரி பாகங்களும் பொருட்களும் பிணங்களும் பணங்களும்  மிதக்கின்றன என்ற கொடுந்தகவல் வந்தது. அந்த விமானத்தில் பயணித்த ஒருவர்கூட உயிரோடு இல்லை. அந்தப் புதுவிமானம் எப்படி விபத்தைச் சந்தித்தது என்று நாங்கள் கலக்கத்தோடு விசாரித்தோம். அந்த விமானிக்குக் கடன் தொல்லை இருந்திருக்கிறது. தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். தன் தற்கொலையோடு விமானத்தையும் சாகடித்திருக்கிறார். இதைக்கேட்டு எங்கள் நெஞ்சு வெடித்து விட்டது. செய்தி உலகமெல்லாம் பரவுகிறது. அது தமிழ்நாட்டுக்கும் வருகிறது. அந்தச் செய்தி வந்த பதினைந்து, இருபது நிமிடங்களுக்குள் என் நண்பர்களுக்கெல்லாம் கலைஞரின் செய்தி பறக்கிறது. வைரமுத்து எங்கே என்று விசாரிக்கிறார்.நான் இந்தோனேஷியாவில் இருந்து புறப்படும்போது சிங்கப்பூர் கிளம்புகிறேன் என்று கலைஞரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். சிங்கப்பூர் விமானம் கடலில் விழுந்தது. அதில் ஒரு இந்தியரும் பலி என்று தகவல் வந்ததால் கலைஞர் பதறிவிட்டார். என் நண்பர்களையெல்லாம் தொடர்புகொண்டு வைரமுத்து எங்கே என்கிறார்.   இதையறிந்த ஒருவர் என்னை நோக்கி ஓடிவருகிறார். செக்யூரிட்டிகளை எல்லாம்  தாண்டிக்கொண்டு  ஓடிவருகிறார். வந்து கலைஞர் உங்களைத் தேடுகிறார். தேடிக்கொண்டிருக்கிறார் என்றார். உடனே அங்கிருந்து கலைஞரைத் தொடர்பு கொண்டு, அய்யா, நான் நலமாக இருக்கிறேன் என்றேன். இப்பத்தான் எனக்கு நிம்மதி என்றார். ஒரு முதலமைச்சர் தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வைரமுத்துவுக்கு என்ன ஆயிற்று என்று கவலைப்படுகிறார் என்றால் இந்த அக்கறையை என்னவென்று சொல்வது.அவர்மீது எனக்கிருக்கிற அக்கறையும் அளப்பரியதுதான். அவர் அறுவைச் சிகிச்சைக்குப் போனபோது ஒரு பதினைந்து நாள், காலைச் சிற்றுண்டியையே நான் சரியாகச் சாப்பிடவில்லை. அவரது ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்து ஒரு கவிதை எழுதினேன். அவர் நலமாகி வந்தபிறகு அதை அவர் கையில் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டுக் கண்ணாடியைத் தூக்கிக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். என்னை அருகிலே வருமாறு சைகை செய்தார். சென்றேன். என் நெற்றியிலே முத்தமிட்டார். என் தலையைத் தடவி வாழ்த்தினார். அந்தக் கவிதை முரசொலியில் வந்திருந்தது. அதைப் படித்துவிட்டு சின்னக்குத்தூசியார்  பாராட்டினார்.. பொதுவாக அவர் கவிதைகளைப் பாராட்ட மாட்டார்.  அவர் கட்டுரையாளர் அவரே பாராட்டியது பெருமகிழ்வை ஏற்படுத்தியது.

எல்லா வகையிலும் சோதனைகளையே சந்தித்து வரும் கலைஞரின் இதயம், எப்படி அவற்றையெல்லாம் தாங்குகிறது?அவர், வாழ்க்கையில் சுகங்களைவிட அல்லல்களை அதிகமாக அனுபவத்திருக்கிறார். அவர் உடலும் மூளையும் துன்பத்துக்கு தயாராகிவிட்டன. அதாவது  வள்ளுவர் குறளுக்கு உரையெழுதிய கலைஞருக்கு வள்ளுவர் குறளேதான் பொருந்தும்."இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் 
துன்பம் உறுதல் இலன்'இன்பம் வந்தால்தான் அவருக்கு ஆச்சரியம். இது நமது இயல்புக்கு விரோத மாயிற்றே. இந்த வெற்றி நமது இயல்புக்கு அந்நியமாயிற்றே. துன்பம்தானே நமது வாழ்வின் அன்றாட உணர்வு. துன்பம் தானே நமது இயல்பு என அப்படியே பழகிவிட்டார். அதனால் அவரைத் துன்பம் எதுவும் செய்வதில்லை. துன்பம் இல்லாத நாள் கலைஞருக்குத் துன்பமான நாள். 

கலைஞரின் சமயோஜித புத்தி பற்றி?நிறையச் சொல்லலாம். சொல்லிக் கொண்டே இருக்கலாம். கொள்கையோடு கலந்து வரும் கலைஞரின் சமயோஜித புத்தியை நான் மிகவும் ரசிப்பேன். ஒருமுறை சட்டமன்றத்தில் ஹெச்.வி. ஹண்டே கலைஞர்  பற்றி, மூன்றாந்தர அரசென்று விமர்சனம் செய்துவிட்டார். இதைக்கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அவர்மீது பாயப்போய்விட்டார்கள். ஆளுங்கட்சி உறுப்பினர்களைக் கைகாட்டி அமர்த்திய கலைஞர், "ஹண்டே, தவறாகச்சொல்கிறீர்கள். இது மூன்றாம்தர அரசல்ல. நான்காம் தர அரசு பிராமண, சத்ரிய, வைசிய, சூத்ர என்ற வரிசையில் இது சூத்திரர்களின் அரசு' என்று சொன்னார். இந்த பதிலைக் கேள்விப்பட்டு பெரியார் ஆடிப்போய்விட்டாராம். பெரியார் சாதாரணமாக நெகிழமாட்டார்.  அப்படிப்பட்ட பெரியாரையே இந்த பதில் உணர்ச்சிவசப்படுத்தியது. இது கொள்கையோடுகூடிய சமயோஜிதம். தனது பேராற்றல் முழுவதையும் இயக்கத்தை வளர்ப்பதற்காகப் பயன்படுத்துகிறவர் கலைஞர். 

இங்கு பிறப்பதற்கு பதில் கலைஞர் கிரேக்கத்திலோ ஜெர்மனியிலோ பிறந் திருந்தால்? நாம் அவரை இழந்திருப்போம். திருக்குறள் வேறு ஒரு மொழியில் எழுதப்பட்டிருந்தால், உலக இலக்கியம் ஆகியிருக்கும் என்பது உண்மை. தமிழர்களுக்கு அந்தச் செல்வம் இல்லாது போயிருக்கும். அது ஒரு வெறுமை. கலைஞர் இந்த மண்ணில் பிறக்காமல் வேறு நாட்டில் பிறந்திருந்தால் உலகத்தலைவர் ஆகியிருப்பார் என்பது உண்மை. ஆனால்  தமிழ்நாடு அந்தப் பெருமையை இழந்திருக்கும். அது வெறுமை.

கலைஞர் ஒரு தேர்தலில்கூட  நின்று தோற்றதாய்ச் சரித்திரமில்லையே இது எப்படி?தமிழ்நாட்டு மக்கள் அவரை மட்டும் இழக்கத் தயாராக இல்லை.

வாஜ்பாய் போன்ற பல தேசியத் தலைவர்கள் 80, 85-ஐத் தாண்டியதுமே அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விடுகிறார்கள். கலைஞர் மட்டும் எப்படி 91- ஐத்தொட்டும் அரசியலில் தொடர்கிறார்?இரண்டு செய்திகளைப் பார்க்கவேண்டும். உடல்நலம், மூளை வளம்.  இரண்டும் எல்லோருக்கும் ஒத்துழைப்பது இல்லை. வாஜ்பாய் பெரும் தலைவர்தான். தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு செலுத்துகிறவர். நான் அவர்மீது பாசமுள்ளவன். அவரோடு பழகியிருக்கிறேன்.அவர் கலைஞரைவிட  8 மாதம் இளையவர். ஆனால் உடல்நலம் அவருக்கு ஒத்துழைக்க வில்லை. உடல்நலம் அவருக்கு இருந்திருந்தால் அவரும் அரசியலில் இருந்திருப்பார். கலைஞரின் வாழ்க்கை சக்கர நாற்காலிக்குநகர்ந்திருந்தாலும் அவர் சிறகுகள் முறியவில்லை. இன்னொன்று அவரது குடும்பத்தின்  மரபணுக்கள், அவர்கள் எல்லோரையும் நீண்டநாட்கள் வாழவைக்கும் தன்மை கொண்டவை. அவர் குடும்பத்தில் எல்லோருமே 90 வயதுக்கு மேல்தான் வாழ்ந்திருக்கிறார்கள். (முரசொலிமாறன் தவிர). மரபணுக்கள் அவருக்குப் பாதி உதவி செய்திருக்கின்றன. தன்னைப்புதுப்பித்துக்கொண்டே இருப்பவன் முதுமை ஆகமாட்டான். சொல்லால், செயலால், எழுத்தால் தன்னைக் கலைஞர் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். போன மாத "இனிய உதய'த்தில் என்ன வந்திருக்கிறது என்று கேட்டால் உடனே சொல்லுவார். ஏதாவது உரையாடலுக்கு மத்தியில் நக்கீரனில் அந்தச் செய்தி வந்திருக்கிறது பார் என்பார். அவ்வளவு நினைவாற்றல் உள்ள அவருக்கு பழைய நடிகர்களான டி.ஆர். ராஜகுமாரியும் சாரங்கபாணியும்தான் தெரியும் என்றில்லை, இன்று இருக்கிற அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, நயன்தாரா, ஹன்சிகா வரைக்கும் அவருக்குத் தெரியும். இது அவரது கலைமீதான ஈடுபாட்டின் அடையாளம். இந்த வயதிலும் கிரிக்கெட்டில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாரே என்பது எனக்கு ஆச்சரியம். நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. அவர் கிரிக்கெட்மீது ரொம்ப ஆர்வமாக இருப்பார். அவர் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்தால் யாரோடும் பேசமாட்டார். அவர் கிரிக்கெட்டில் உட்கார்ந்தால் நான் விரைவில் விடைபெற்று வந்துவிடுவேன். அவருக்குக் கிரிக்கெட்டில் அவ்வளவு ஈடுபாடு. யார் ஜெயிப்பார் என்று சரியாகச் சொல்வார். ஸ்கோரையும் மற்றவர்களுக்குச் சொல்வார். அதுபோன்ற ஈடுபாடு அவரை இளமையாக வைத்திருக்கிறது.

கலைஞருக்கு தமிழர்கள் செலுத்த வேண்டிய நன்றி என்ன?காட்டவேண்டிய நேரத்திலாவது அதைக் காட்டினால் போதும். 

கலைஞரிடம் உங்களுக்குப் பிடித்ததும் பிடிக்காததும் என்ன?பிடித்தது; மன்னிப்பது! பிடிக்காதது; தவறுகளையும் மன்னிப்பது.

கலைஞருக்கு இன்னும் கிடைக்கவேண்டிய சிறப்புகளென்று எதைக் கருதுகிறீர்கள்?  91-ல் அடியெடுத்து வைக்கும் அவருக்கு நீங்கள் சொல்லும் வாழ்த்துகள் என்ன?திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது பலருக்கும் வழங்கப் பட்டிருக்கிறது. பெற்றவர்கள் எல்லாம் பெருமைக்கு  உரியவர்கள் என்ற கருத்தில் எனக்குமாறுபாடு இல்லை. ஆனால் பெருமைக்குரிய ஒருவர் அதை இன்னும் பெறாமல் இருக்கிறாரே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. திரையுலகில் எழுபது ஆண்டுகளாகப் பங்களிப்பு செய்த ஒரு மாமனிதரை மொழி என்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு சாதனை நிகழ்த்திய ஒரு எழுத்தாளரை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு என திரையுலகின் எல்லாத் தளங்களிலும் இயங்கியவரை, மூத்த பெருமகனை கௌரவம் செய்ய நூற்றாண்டு கண்டுமுடித்த திரையுலகம் ஒரு பெரும் விருதை வழங்க வேண்டுமென்றால் அது தாதா சாகிப் பால்கே விருதாகத்தான் இருக்கும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இதைச் சிந்திக்க வேண்டும் என்று உரியவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.  கலைஞர் நூறாண்டுகளுக்கும் மேல் உடல்நலத்தோடு வாழ வேண்டும். மனவளத்தோடு வாழவேண்டும். உடன் இருப்பவர்கள் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

-நக்கீரன்-