Breaking News

தாக்குதல் முன்னரே திட்டமிட்டு வேண்டுமென்றே நடாத்தப்பட்டுள்ளது! -இரா.சம்பந்தன்

அளுத்கமை – தர்ஹாநகரிலும் பேருவளையிலும்
முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டவை, முற்கூட்டியே திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகவே தோன்றுகின்றன.
எனவே, அந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் இத்தகைய சம்பவங்கள் திரும்பவும் இடம்பெறாமல் இருக்கின்றமையை உறுதிப்படுத்துவதற்கு பொருத்தமான பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கின்றது.
மேற்படி சம்பவங்கள் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கோரியிருக்கின்றார்.
அந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:-
அளுத்கமை – தர்ஹாநகரிலும் பேருவளையிலும் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் மிகுந்த கவலையைக்குரியவை; மனதை சஞ்சலத்துக்கு உட்படுத்துபவை.
முஸ்லிம் சமூகத்தின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதல்களுக்கு இலக்காகி பலத்த சேதமடைந்திருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுள் மூவர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
பெரும்பான்மை இனத்தவர்களின் தீவிரப் போக்குடைய இரு இயக்கங்கள் கூட்டம் நடத்திவிட்டு வீதி வழியாக ஊர்வலம் போன சமயம் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் முன்னரே திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தோன்றுகின்றது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்த போதிலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாயினும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் அவர்களால் தடுக்க முடியவில்லை.
இது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் விழிப்பில்லாத நிலையில் இருந்துள்ளனர் என்பதையே காட்டுகின்றது.
கடந்த காலத்திலும் முழு நாட்டுக்கும் தீங்கை ஏற்படுத்தக் கூடிய இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.
தவறிழைத்தவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் இத்தகைய சம்பவங்கள் மீள இடம்பெறாமல் இருக்கின்றமையை உறுதிப்படுத்துவதற்காக வேறு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.