Breaking News

“தமிழீழக் கோரிக்கையை கைவிடுங்கள்” தமிழகத்தில் மூக்குடைபட்டாரா ‘சம்பந்தன்’ ?


“பாரதப் பிரதமர் நரேந்திரமோடி எம்முடனான உரையாடலின்
போது தலைவர் சம்பந்தனை இலங்கையின் கௌரவமான ஒரு தலைவர் என பாராட்டியது எமக்கு மிகுந்த பெருமையாக இருந்தது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா சில நாட்களின் முன்னர் நெகிழ்ந்து போய் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்கள் செய்திகளாக பத்திரிகைகளை அலங்கரித்திருந்தன. உண்மையில் சம்பந்தன் கௌரவம் மிக்க தலைவராக தன்னை அடையாளப்படுத்துவதற்கு கடந்த சில நாட்களாக மேற்கொண்டுவரும் பகீரப்பிரயத்தன முயற்சிகள் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு தமிழ்லீடர் விருப்பார்வம் கொண்டிருக்கிறது.
சுவாமி சொன்னது ஒன்று, நடந்தது ஒன்று; பின்னணி என்ன?
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மோடி சந்திப்பதாக இருந்தால் மஹிந்த அனுமதி வழங்கவேண்டும் எனத் தெரிவித்த பரபரப்பான செய்தி வெளியாகி இரண்டொரு நாட்களில் கூட்டமைப்பு இந்தியா பறந்தது, மோடியை சந்தித்தது சுஸ்மாவைச் சந்தித்தது தமிழகம் சென்றது போன்ற செய்திகள் எல்லாம் வெளிவந்தன. இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது “ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..” என்ற தென்னித்திய திரையிசைப்பாடலை கேட்கும்போது எழும் உணர்வு வெளிவருவதை தவிர்க்க முடியாது.
sampanthan-newsஇந்தியா – இலங்கை அரசின் இறுக்கமான உறவு நிலையின் வெளிப்பாடான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே சம்பந்தன் குழுவின் இந்தியப்பயணம் அமைந்திருப்பதாகவே தெரிகிறது. இந்தத் திட்டத்தின் பின்னணியில் கௌரவ தலைவராக மோடியால் விழிக்கப்பட்ட இரா.சம்பந்தன் இருந்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இந்திய மத்திய அரசு மாறினால் கொள்கை மாறுமா?
ஐ.நாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் முதல் முறையாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் முழுமையான காத்திரத்தன்மையை இல்லாமல் செய்த இந்தியா போக்குக்காக அந்தத் தீர்மானத்தினை ஆதரித்து வாக்களித்திருந்ததை எவரும் மறந்திருக்கப்போவதில்லை. அதன் தொடராக இறுதியாக விசாரணைக்குழு தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது இந்திய அரசு சிங்கள அரசினை காப்பாற்றும் தனது உண்மையான முகத்தினை நேரடியாகவே வெளிப்படுத்தி குறித்த தீர்மானத்தினை எதிர்த்திருந்தது. அதனுடன் நின்றுவிடாது விசாரணைக்குழு தொடர்பில் இன்றுவரையில் எதிர்க்கருத்துக்களையே வெளியிட்டுவருகிறது.
இலங்கை அரசு அனுமதி மறுத்திருந்தாலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சர்வதேச விசாரணைக்குழு இலங்கைக்குள் செல்லாமலேயே தனது விசாரணைகளை முன்னெடுத்துவருகிறது. இந்த விசாரணை முடிவு எப்படியும் சிங்கள அரசுக்கு பலத்த நெருக்கடியை கொடுக்கத்தான் போகிறது என்பதை யார் தலையைக் கொடுத்தாலும் தடுத்துவிடமுடியாது என்பதே நிலைமை. சிங்கள அரசும் அதன் படைகளும் இறுதிப் போரின் போது இனப்படுகொலையை நிகழ்த்திக்கொண்டு தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்தவேளை மேற்குலகு விடுத்த அழுத்தங்கள், நெருக்கடிகளிலிருந்து சிங்கள அரசை காப்பாற்றியது இந்திய மத்திய அரசு தான். எனவே விசாரணையின் முடிவில் சொல்லப்படப்போகும் செய்தி இன அழிப்புக்கு ஒத்துழைத்த இந்தியாவை நோக்கியதாகவும் அமையத்தான் போகிறது. இந்தியாவின் மத்தியில் ஆட்சி மாறியிருந்தாலும் கொள்கை வகுப்பு சக்திகளாக இருக்கப்போகிறவர்கள் என்றுமே ஒரே வர்க்கம் தான். எனவே இந்தியாவின் ஆட்சி மாற்றம் என்பது ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கப்போகிறது.
மோடி – கூட்டமைப்பு சந்திப்பு நாடகம்
இந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள அரசு எதிர்கொள்ளும் உடனடியான நெருக்கடியைச் சமாளிப்பதற்கு கூட்டமைப்பு – மோடி சந்திப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் சம்பந்தனை அழைத்து ஆதரவு தேடிக்கொள்ளும் மஹிந்த ஒரு படி மேலே நகர்ந்து இந்தியப் பிரதமர் ஊடாக தனது நாடகத்தினை முன்னெடுத்திருக்கிறார். ஏற்கனவே மஹிந்தவின் செல்லப்பிள்ளையாக விளங்கிவருகின்ற சம்பந்தன், சுமந்திரன் தரப்பு அதற்கு சிறப்பான ஒத்திகைகளையும் கொடுத்து நாடகத்தின் காத்திரத்தன்மையை வலுப்படுத்தியிருக்கிறது.
சம்பந்தனின் அதி உச்ச இராஜதந்திரச் சூழ்ச்சி
இந்த இடத்தில் ஒரே நேரத்தில் இரண்டு நாட்டுத் தலைவர்களையும் சமாளிக்கும் அதி உயர் இராஜதந்திரச் சூழ்ச்சியைக் கையாண்டிருக்கிறார் சம்பந்தன். அதாவது “ஒரு எறியில் இரண்டு மாங்காய்கள்” என்பதன் அடிப்படையில் சம்பந்தன், மோடியைச் சந்தித்த போது நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்ன? என சம்பந்தன் குழுவைப் பார்த்த மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்காகவே 60 ஆண்டுகளாக தவம் கிடந்த சம்பந்தன் “13” ஆவது திருத்தச் சட்டத்தினை முதலில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுடன் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தான் தீர்வு வேண்டும் என்று கோரியிருக்கின்றார். தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான ஒரு கோரிக்கையினை முன்வைப்பதால் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக பாடுபடுவது மிக மிக இலகுவானது என்பதை உணர்ந்து கொண்ட மோடி இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக சம்பந்தன் குழுவிற்கு வாக்குறுதியும் அளித்துவிட்டார்.
இந்திய அரசு விரும்பவில்லை அதனால் பிரிவினையை கோர முடியாது
இதனை எதிர்பார்த்த சம்பந்தன் சந்திப்பு முடிந்ததும் முடியாததுமாக ஊடகவியலாளர்களிடம் மோடியுடனான சந்திப்புத் தொடர்பில் கதைகளை அவிழ்த்துவிட்டார்.. “இந்திய அரசு இலங்கையில் பிரிவினையை விரும்பவில்லை, எனவே அது தொடர்பில் நாங்கள் கோர முடியாது” இது சம்பந்தன் தெரிவித்த கருத்தின் பிரதான சாராம்சம். சம்பந்தனைப் பார்த்து ஒரு கேள்வியை முன்வைக்கலாம்.. இந்திய அரசு விரும்பினால்தான் நீங்கள் உங்கள் குடும்பத்தில் கூட உங்கள் அந்தரங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா? என்று கேட்கக் தோன்றுகின்றது.
எங்கள் பிரச்சினை அறுபது ஆண்டுகளைக் கடந்தது. எமது விடுதலைக்காக பல இலட்சம் உயிர்கள் விலையாகியிருக்கின்றன. பல இலட்சம் உயிர்கள் அங்கங்களை இழந்திருக்கிறார்கள். பல்லாயிரம் விதவைகள், அனாதைகள் உருவாகியிருக்கிறார். இவையெல்லாம் சம்ந்தனின் அறளைக் கண்களுக்குத் தெரியவில்லையா? இந்திய அரசு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கத்தேவையில்லை என்று முடிவெடுத்தால்.. இந்தியா முடிவெடுத்துவிட்டது எனவே எங்களுக்கு தீர்வு தேவையில்லை என்று முடிவெடுக்கப்போகிறாரா சம்பந்தன்? சர்வதேச அரங்கில் சிங்கள அரசு செல்லும் போக்கு மிக மோசமான நிலையினை நோக்கியே செல்கிறது என்பதும் தவிர்க்கமுடியாத நிலையில் தமிழ் மக்களுக்கு காத்திரமான தீர்வு ஒன்றை வழங்குவதற்கான புறச்சூழலை சிங்கள அரசு எதிர்கொளும் என்பதும் இலங்கையின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக சிங்கள ஆட்சியாளர்களால் மதிக்கப்படுகிற சம்பந்தனால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?
எதுவுமே இல்லாத 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தன் அவசர அவசரமாக இந்திய அரசின் ஊடாக இந்தச் சந்தர்ப்பத்தில் கோருவதை எந்த நோக்கில் பார்ப்பது?
டக்ளஸூம் மோடிக்கு நன்றி தெரிவிப்பு
இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினையும் இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும், சிங்கள அரசின் அசைக்கமுடியாத நம்பிக்கை நட்சத்திரமாக காலாகாலமாக விளங்கி வருகின்ற ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மோடி வழங்கிய வாக்குறுதிக்காக நன்றி தெரிவித்திருக்கின்றார். சிங்கள அரசின் அங்கத்துவ அமைச்சராக விளங்குகின்ற டக்ளஸ் தேவானந்தாவே அந்தத் தீர்வினை ஆதரிக்கும் நிலையில் அதன் காத்திரத்தன்மை தொடர்பில் நீண்ட விளக்கம் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
கூட்டமைப்பு மக்களிடம் கோரிய தீர்வுத்திட்ட ஆலோசனை எங்கே?
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் இறுதித் தீர்வு தொடர்பில் மக்களிடம் இருந்து கருத்துக்களைக் கோரியிருந்ததே? அந்தக் கருத்துக்கள் எந்த வகையில் வந்தன, அவற்றில் எவற்றையாவது பரிசீலித்தார்களா? போன்ற கேள்விகளை யாரிடம் கேட்பது? அல்லது இவையும் மக்களை ஏமாற்றும் ஒரு வகை உத்திதானா?
விக்கியை கழற்றிவிட்டுச் சென்றதா சம்பந்தன் குழு?
இதற்கு முன்பாக இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது, சம்பந்தன் குழு இந்தியா செல்லும் போது வடக்கு மாகாணத்திற்கு தென்னிலங்கையிலிருந்து இறக்குமதியாகியிருந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கழற்றிவிட்டுச் சென்றது தான் அந்தச் செய்தி. விக்கினேஸ்வரன் தென்னிலங்கையிலிருந்து இறக்குமதியாகிருந்த போதிலும் வடக்கு மாகாணசபையில் ஆளுநருடனும் பிரதமன செயலாளருடனும் அன்றாடம் நடைபெறும் இழுபறிகளால் மிக நொந்து நூலாகியிருப்பதாக தெரிகிறது. 13ஆவது திருத்தச் சட்டத்தினால் எதனையும் செய்ய முடியாது என்று வெளியிலிருப்பவர்களை விடவும் கூடுதலாக தற்போது பட்டுணர்ந்து தெரிந்துவைத்திருக்கும் ஒரே நபராக விக்கினேஸ்வரனே விளங்குவது முக்கியவிடயமாகும். இதன் காரணமாக விக்னேஸ்வரனை அழைத்துச் சென்றால் விக்னேஸ்வரன் தயவு செய்து 13 வேண்டாம் என்று மோடியிடம் மன்றாடினாலும் மன்றாடுவதற்கான சாத்தியம் உள்ளதாக சம்பந்தன் தரப்பு கருதி முடிவெடுத்திருக்கிறது. இதனிடையே விக்கினேஸ்வரனை சம்பந்தன் தரப்பு இந்தியாவுக்கு அழைக்காமை தொடர்பில் இருவருக்கு இடையில் சிறிய அளவிலான முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக சில அரசல் புரசலான தகவல்கள் யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர்கள் மட்டத்தில் அடிபடுகின்றன.
இதன் பின்னர் விக்கினேஸ்வரனைக் கழற்றிவிட்டு தனது நம்பிக்கை நட்சத்திரங்கள் புடை சூழ இந்தியத் தலைநகருக்கு எழுந்தருளிய சம்பந்தன் அங்கு 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் தனது இந்தப் பிறவிக்கான பலனை அடைந்துவிடுவேன் என்பது போன்று வழிந்து தள்ளியிருக்கிறார்.
“கரும்பு தின்னக்கூலி வேண்டுமா?” என்பது போல எதுவுமே அற்ற தீர்வினை நடைமுறைப்படுத்துமாறு மஹிந்தவைக் கோரலாம் என்பதில் மோடிக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை எனவே அவரும் உடனேயே உடன்பட்டுவிட்டார். இதில் இன்னொரு விடயத்தினையும் நோக்கலாம், ஒரு தரப்பு ஒரு தீர்வினை சுட்டிக்காட்டுகின்ற போது எதிர்த் தரப்பு அந்தத் தீர்வில் சில விடயங்களை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தலாம்.. ஆகவே வடக்கு மாகாண சபைக்கு தற்போது உள்ள அதிகாரங்களுக்கும் குறைந்த எதுவும் அற்ற ஒரு தீர்வு தமிழ் மக்களின் தலையில் கட்டியடிக்கப்படலாம்.
தமிழகத் தலைவர்களின் தலையில் மிளகாய் அரைக்க முயன்றார் சம்பந்தன்
மேற்குறித்த விடயங்களை தொகுத்துப் பார்க்கின்ற போது சம்பந்தன் குழுவின் இந்தியப் பயணம் உணர்த்தும் செய்தியை வாசகர்கள் இலகுவில் புரிந்துகொள்ளமுடியும். இந்த இடத்தில் மஹிந்த விசுவாசத்தை வலுப்படுத்தும் நோக்கில் இரா.சம்பந்தன் ஒரு படி மேலே சென்று தமிழகத் தலைவர்களின் தலையில் மிளகாய் அரைப்பதற்கு முனைந்து மூக்குடைப்பட்டிருக்கிறார்.
இலங்கையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாங்களே தமிழீழம் தொடர்பிலோ, நாட்டைப் பிரிப்பது தொடர்பிலோ கோரவில்லை. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமிழீழக் கோரிக்கையினைக் கைவிடவேண்டும் என்பதை மோடி உடனான சந்திப்பின் பின்னர் சூசகமாக தெரிவித்த சம்பந்தன் அதனை நேரடியாக தமிழகத்தில் தெரிவிக்கவும் முனைந்திருக்கிறார். மோடியுடனான சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த சம்பந்தன்,
இந்தியப் பிரதமரை சந்திக்கும் நீங்கள், தமிழகத்தின் அரசியல் தலைவர்களின் தலையீட்டை வேண்டாம் என்று மறுப்பது ஏன் என்று சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சம்பந்தன், “நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை, தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்களிப்பை முழுமையாக வரவேற்போம் என்றார்.
ஆனால், இதற்குத் தேவையான செயற்பாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் ஒருமனதோடும் நடைபெற வேண்டும் என்று விரும்புவதாக அவர் பதிலளித்தார்” எனவே சம்பந்தனின் கருத்தின் அடிப்படையில் ஒரு மனதோடு எனக் குறிப்பிடுவதன் சாராம்சம் என்ன? சம்பந்தனும், மோடியும் தெரிவிக்கும் அதிகாரம் எதுவும் அற்ற 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வினை தமிழகமும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதா?  என்பதை சம்பந்தன் விபரிப்பாரா? ஆக சம்பந்தனின் கருத்தின் தொனி, தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் தமிழீழக் கோரிக்கையினைக் கைவிடவேண்டும் என்பது தான் என்பதை இலகுவில் புரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் மூக்குடைபட்ட சம்பந்தன்
இதனுடன் நின்றுவிடாத சம்பந்தன், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கடும் நிலைப்பாட்டில் வைத்திருக்கின்ற தமிழீழக் கொள்கையைக் கைவிடுங்கள் எனக் கோருவதற்காக தமிழகம் சென்றிருக்கிறார்.
இறுதியில் அ.தி.மு.கவின் சாதாரண தலைவர்களைக் கூட சந்திக்க முடியாத நிலையில் வெறுங்கையுடன் திரும்பத் தயாராகியிருப்பதாகத் தெரிகிறது. புலத்தில் பதவிக்காக மோதிக்கொண்டு புலம்பெயர் மக்கள் மத்தியில் பிளவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உலகத் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே அசைக்கமுடியாத நம்பிக்கை தமிழகம் என்பதை சம்பந்தன் புரிந்துகொள்ள வேண்டும்.
மோடியை சந்தித்த சம்பந்தனை தமிழக முதல்வர் சந்திக்காமை சம்பந்தனுக்கும் மஹிந்த தரப்புக்கும் பேரடியாகும். வரலாற்றில் தமிழ் மக்களுக்கு தமிழக முதல்வர் செய்த பேருதவிகளில் ஒன்றாக சம்பந்தனை சந்திக்காமல் தமிழக முதல்வர் தவிர்த்தமையை ஒரு முக்கியவிடயமாக பதிவு செய்வதில் தவறில்லை.
வரலாறு வரலாறுகளையே பதிவு செய்யும்!
-தமிழ்லீடர்-