Breaking News

கனடா-உறங்காவிழிகள் ஆதரவுடன் மலையக மக்களுக்கு உதவி வழங்கல்


மண்சரிவு அபாயம் மற்றும் தீவிபத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டகைகளில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக மலையக சமூக ஆய்வு மையத்துடன் இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்திருந்தது. 

கடந்த பல மாதங்களாக மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மக்களும் தீ அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர். 

இம் மக்களின் தொடச்சியான அவலத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து மலையக மக்களும் குறைந்தபட்சம் தீவின் ஏனைய பகுதி மக்களைப் போல் சமத்துவமாக வாழும் உரிமைகளப் பெற்றுக் கொடுக்க  வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் மலையக சமூக ஆய்வு மையத்தின் வேண்டுதலின் பேரில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது அண்மையில் மண்சரிவு அபாயம் காரணமாக லயன்களை விட்டு இடம்பெயர்ந்த, தீ அனர்த்தம் காரணமாகவும் லயன்கள் மற்றும் உடமைகள் அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்றிருந்தது. 

கடந்த மாதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மலையகத்திற்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட பின்னர் மேற்படி பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவாறு கோரிக்கை விடப்பட்டது. அதன் பிரகாரம் கனடா வாழ் தமிழ் மக்களின் பங்களிப்புடன் செயற்பட்டுவரும் “உறங்கா விழிகள் தன்னார்வ தொண்டு அமைப்பு-கனடா” என்ற நிறுவனத்தின் தலைவர் திரு சுப்பிரமணியம் சோமசுந்தரம் அவர்கள் இச் செயற்திட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்க முன்வந்தார்.

முதற்கட்டமாக ஒரு தொகுதி உடுப்புகள் உறங்கா விழிகள் அமைப்பினால்  அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. மண்சரிவு அபாயத்தினால் புறொக்மோர்  தோட்டத்திலிருந்து தமது லயன்களை விட்டு வெளியேறி ஹாற்மோர் தோட்டத்தில் தறப்பாள் கொட்டகைகளில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கும், டயகமமேற்கு பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ அனர்த்தத்தனால் குடியிருந்த லயம் முழுவதும் எரிந்து நாசமாகிய நிலையில் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள டயகமமேற்கு தோட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

கடந்த திங்கட்கிழமை (2014.12.22)  மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தலைமையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், கிறீன் பியூச்ச நேசன் பவுண்டேசன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் சத்தியசீலன் ஆகியோரும் மலையக சமூக ஆய்வு மையத்தின் ஆலோசகர்களில் ஒருவரும் அரசியல் ஆய்வாளருமான சி.யோதிலிங்கம் மற்றும் அவ் அமைப்பைச் சார்ந்த பிரபாகரன், கிருபாகரன், ஜெயக்குமார் உட்பட   செயற்பாட்டாளர்களுமாக பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்கியுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் தாம் எடுத்துச் சென்ற பொருட்களை வழங்கியிருந்தனர். 

மேற்படி உதவி வழங்கும் செயற்திட்டத்தில் மலையக மக்களது மேம்பாட்டிற்காக செயற்பட்டுவரும் “அடையாளம்” என்ற அமைப்பும் இணைந்து கொண்டு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது. 
பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான உதவிகளை வழங்கி உதவிய “உறங்காவிழிகள்-கனடா  தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குனர் திரு சு. சோமசுந்தரம் அவர்களுக்கும், மலையகத்தில் உதவிப் பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கும், “அடையாளம்” அமைப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 


தொடர்ந்தும் மலையகத்தில் தொடரும் இயற்கையின் சீற்றத்தினால் மக்கள் உயிரிழப்பு மற்றும்  இடம்பெயரும் அவலங்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொணடிருக்கின்றது. அம்மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவிரும்பும் நல் உள்ளங்களிடமிருந்து உதவிகளை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம். 

நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி