Breaking News

அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து ஆய்வு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான தமிழ்நாடு அரசின் முடிவுக்காக இந்திய மத்திய அரசு காத்திருப்பதாக,  இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் எழுப்பிய கேள்விக்கு நேற்று அவர் அளித்துள்ள எழுத்துமூலமான பதிலில்,
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவது குறித்து சிறிலங்கா அரசுடன் இந்திய மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடனும் மத்திய அரசு இதுகுறித்துப் பேசி வருகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியாக இந்த நடவடிக்கையை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.மத்திய உள்துறை அமைச்சு, வெளிவிவகார அமைச்சுக்களின் அதிகாரிகள் குழு தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டு, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிய விரும்புகிறது.சிறிலங்காவுக்குத் திரும்ப முடிவெடுக்கும் அகதிகள், இந்தியாவிடம்  இருந்தும் இலங்கை அரசிடம் இருந்தும் எத்தகைய வசதிகளை எதிர்பார்க்கின்றனர் என்பதை அறிவதற்கு இந்த ஆய்வு அவசியம் என்று இந்திய மத்திய அரசு கருதுகிறது.
இதற்கான ஏற்பாட்டை செய்யும் படியும், இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுப்பது என்பது குறித்தும் தமிழ்நாடு அரசிடம் இந்திய வெளிவிவகார அமைச்சு கேட்டுக்க் கொண்டுள்ளது.இந்த விடயத்தில் தமிழ்நாடு அரசின் முடிவுக்காக வெளிவிவகார அமைச்சு காத்திருக்கிறது’ என்று ஜெனரல் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.