மைத்திரிக்கு ஆதரவளிப்பேன் - மகிந்த
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்ல திட்டங்கள் அனைத்துக்கும் தொடர்ச்சியாக ஆதரவளிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எந்தவிதமான முரண்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்ளாது அமைதியை பேணுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரியுள்ளார். கொழும்பு ஜனாதிபதி காரியாலயத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன் உடன்பாடு இல்லாத திட்டங்களுக்கு எதிராக மட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவியை துறந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் கடமையாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றிய போது அநேகமான அமைச்சர்கள் கண்ணீர் மல்கியதாகத் தெரிவிக்கப்படுவதுடன் அதன் பின்னர் அமைச்சர்களை சந்தித்த ஜனாதிபதி பின்னர் ஜனாதிபதி மாளிகையின் பணியாளர்களையும் சந்தித்த பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.








