இலங்கையில் சுவாரஸ்யமான அரசியல்
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாட்கள் வேலைத்திட்டம் இலங்கையின் அரசியலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் முக்கிய விடயமாக எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது.இதற்கிடையில், நேற்று கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் வைத்து, எதிர்கட்சித் தலைவராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனேவிரத்ன தெரிவானார்.எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் தெரிவு செய்யப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில், அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் உடனிருந்தனர்.
பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த துமிந்த திஸாநாயக்க, ராஜித்த சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.எஸ்.குணவர்தன, நந்தமித்திர ஏக்கநாயக்க போன்றோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இது இவ்வாறு இருக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அலரிமாளிகையில் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தனர்.இதன் போது அரசாங்கத்தின் பிரதான இணைப்பாளராக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் நாடாளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவானார்.இதில், எதிர்கட்சித் தலைவரை தெரிவு செய்த சில அமைச்சர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றமை விசேட அம்சமாகும்.
அரசாங்க அமைச்சர்களின் உதவியுடன் எதிர்கட்சியின் தலைவராகவும், எதிர் கட்சியின் பிரதான அமைச்சாளராகவும் தெரிவாகியுள்ள இருவரும் அரசாங்கம் 100 நாட்கள் வேலைத்திட்டம் குறித்து விமர்சனங்களையும் முன்வைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.








