கூட்டமைப்பு புதிய அமைச்சரவையில் சேர உடனடி வாய்ப்பில்லை
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்துகொள்வதற்கான உடனடி வாய்ப்பு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பொறுப்புக்களை நேற்று ஏற்றுக் கொண்டதன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அவரை சந்தித்துப் பேசியிருந்தனர்.
இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கிவரும் காணிப் பிரச்சனைகள், சிறையில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலை, இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.








