Breaking News

தனியார் பஸ் கட்டணங்கள் குறைப்பு - இறுதித் தீர்மானம் இன்று

தனியார் பஸ் கட்டணங்களை குறைப்பது குறித்து இன்று இறுதி முடிவு எட்டப்பட இருப்பதாக உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

போக்குவரத்து அமைச்சருக்கும் தனியார் பஸ் சங்கங்களுக்குமிடையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது எத்தனை வீதத்தினால் கட்டணங்களைக் குறைப்பது என முடிவு செய்யப்படும். இது இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு முன்னதாக கட்டண குறைப்பை அமுல் செய்ய இருப்பதாக உள்ளக போக்குவரத்து அமைச்சு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

தனியார் பஸ் கட்டணங்கள் 8 வீதத்திற்கும் 10 வீதத்திற்குமிடைப்பட்ட வீதத்தினால் குறையும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வட்டாரங்கள் கூறின. கட்டண குறைப்பு நாளை முதல் அமுலாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலை கடந்த 21 ஆம் திகதி முதல் 16 வீதத்தினால் குறைக்கப்பட்டது. கடந்த வருட இறுதியில் 7 ரூபாவினாலும் 3 ரூபாவினாலும் டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்த நிலையில் பஸ் கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையின் பிரகாரம் பஸ்கட்டணத்தை குறைக்க உள்ளக போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

பஸ்கட்டணத்தை 8 வீதத்தினால் குறைப்பதாக பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ள போதும் பஸ் கட்டணம் 10 வீதத்தினால் குறையலாம் என நம்பப்படுகிறது. ஆரம்ப கட்டணம் 9 ரூபாவால் இருந்து 8 ரூபாகுறையும் எனவும் அறியவருகிறது.

புதிய கண்டணப்பட்டியல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை, உதிர்ப்பாக விலை, நிர்வகிப்பு செலவு, ஊழியர் சம்பளம் உட்பட 12 அம்சங்களின் அடிப்படையில் பஸ்கட்டண விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஒவ்வொருவருடமும் ஜுலை மாதத்தில் பஸ் கட்டண விலைகள் சீரமைக்கப்படுகிற போதும் கடந்த வருடம் கட்டணங்கள் மாற்றம் செய்யப்படவில்லை.

உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் தனியார் பஸ் சங்கங்களுக்குமிடையிலான சந்திப்பு உள்ளக போக்குவரத்து அமைச்சில் நடைபெறுகிறது.