Breaking News

தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் - பொன்சேகா

தான் தொடர்ந்தும் செயற்பாட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதே தனது அபிப்பிராயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட ஜெனரல் பதவியில் இருந்து அனைத்து வரப்பிரசாதங்களையும் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடவடிக்கை எடுத்தார். அதன்பின் அத தெரணவிடம் கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா, தான் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 34வது சரத்துக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். நேற்றைய தினம் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சரத் பொன்சேகா இழந்திருந்த அனைத்து வரப்பிரசாதங்களும் எத்தகைய சட்டரீதியான தடைகளுமின்றி பெற்றுக்கொள்ள இதன் மூலம் வழிவகுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிணங்க முப்படைகளின் முன்னாள் பிரதானியான சரத் பொன்சேகா அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் மன்னிப்பளிக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். சரத் பொன்சேகாவின் ஜெனரல் பதவி அவருக்கான வாக்குரிமை அனைத்தும் இதனூடாக மீண்டும் உரித்தாகிறது. அத்துடன் இனி சரத் பொன்சேகா முன்னாள் ஜெனரல் என அழைக்கப்படுவார் என்றும் அவருக்கு வாக்குரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை வெற்றிகொள்வதில் முக்கிய பங்காற்றியிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இறுதி யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாகக் கடமையாற்றியிருந்தார். யுத்தத்தை வெற்றிகொண்டதும் அவர் உலகத்தில் சிறந்த இராணுவத் தளபதி என முன்னாள் ஆட்சியாளர்களால் புகழப்பட்டார். 

இராணுவத் தளபதியாக பதவிக்காலம் முடிவடைந்ததும், முப்படைகளின் பிரதானியாக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், 2010 ஆம் ஆண்டு நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முப்படைகளின் பிரதானி பதவியைத் துறந்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டார். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார். 

2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி இராணுவப் பொலிஸார் சரத் பொன்சேகாவை கைதுசெய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இவர் பாராளுமன்ற ஆசனத்தையும் இழந்தார். 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இராணுவ ரீதியாக அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து சின்னங்கள், பதவிகள் மற்றும் பதக்கங்கள் யாவும் பறிக்கப்பட்டதுடன், அவருடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியமும் இடைநிறுத்தப்பட்டது. 

இவருக்கு எதிரான வழக்கு இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றுவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் கீழ் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலையானார். இருந்தபோதும் அவரிடமிருந்து பறிக்கப்பட்ட வாக்குரிமை வழங்கப்படிருக்கவில்லை. 

இந்த நிலையில் கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவை, சரத் பொன்சேகா ஆதரித்தார். ஜனாதிபதியாகத் தான் தெரிவுசெய்யப்பட்டதும் சரத் பொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் மீள வழங்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார். 

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ள நிலையில் சரத் பொன்சேகாவிற்கு இழந்த அனைத்து உரிமைகளையும் மீள வழங்கியுள்ளார். இதுதவிர சரத் பொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் பதவிகளை வழங்குவது தொடர்பில் பாதுகாப்புச் சபையிலும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.