Breaking News

கொழும்பு நண்பனுக்கு ஒரு கடிதம் - ஜெரா

அன்புள்ள கொழும்பு நண்பனுக்கு,நான் நலம். நீ நலமா? இப்படியொரு கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. 


தகவல் தொடர்பு குறுககுறுக தகவல் சொல்லலின் நீள, அகல, ஆழமும் குறைந்துவிட்டதை நீயும் அறிவாய். நானும் அறிவேன். நான் நினைக்கிறேன், ஐந்தாம் தரத்தில் நீயும், நானும் எழுதப் பழகிய, “ உறவினர் ஒருவருக்கு கடிதம் வரைக” கலை அதற்கு மேல் வளராமலே போய்விட்டதென்று. அது இருக்கட்டும். இப்போது இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அரசியல்தான்.


நானும், நீயும் அரசியல் விவரம் தெரியாத காலத்திலேயே பிரிந்துவிட்டோம். உன் அப்பா செய்த உத்தியோகம் உன்னை கொழும்புவாசியாக்கிவிட, என் அப்பா செய்த விவசாயம் என்னை வன்னிவாசியாக்கிவிட்டது. நம் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. அடிப்படையில் நானும் நீயும் ஒரே மொழி, பண்பாடு கொண்டவர்களாக இருந்தாலும், சிந்திப்பில் பாரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டதை உன் அண்மைய பேஸ்புக் பதிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. அது நாம் இருவரும் வாழ்ந்த சூழல் ஏற்படுத்திய மாற்றம்தான்.

நீ என்னைப் பிரிந்து கொழும்பு சென்ற பிறகுதான் நான் அரசியலை அனுபவப்படத் தொடங்கினேன். இன்று காலையில் பிளேன் வந்து சுத்தினால், பள்ளிக்கூடம் இடைவேளையோட விட்டிடும் என்ற நம்பிக்கையுடன் தான் என் பலநாட்கள் ஆரம்பித்திருக்கின்றன. அதேபோல புக்காரா வரும். வான வேடிக்கை காட்டும். தாழப் பறந்து குண்டைக் கொட்டும். பாடசாலைக்குள்ளேயே வெட்டப்பட்ட பங்கருக்குள்ளேயும், மேசையின் கீழும், பெரிய மரப் பொந்துகளுக்குள்ளும், காதுகளைப் பொத்திக் கொண்டு குப்புறப் படுத்துக் கிடப்பேன். அந்த நேரம் இதயம் அடிக்கும் சத்தம் குண்டு சத்தத்தை மிஞ்சும். புக்காரா போனதுமே எழும்பி மண்ணைத் தட்டிக்கொண்டு வீட்டுக்கு ஓடுவோம். அப்படி ஓடிய நாள்களில் கொப்பி, பென்சில், பேனா, சப்பாத்து, செருப்பு என எதுவுமே என்னிடம் நிலையாக இருப்பதில்லை. நான் உயர்தரம் படித்து முடிக்கையில் புக்கார, சுப்பர் சொனிக் ஆகி, சுப்பர் சொனிக், மிக் ஆகி, மிக், மிக் 7 ஆகி, மிக் செலின் எவ் 7 ஆகி வளர்ச்சி கண்டிருந்தது. 

இந்த விமானத்தாக்குதல்களின் பரிணாமத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியாகப் பதுங்க வேண்டியிருந்தது என்பதை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. கடைசியாக வந்த எவ் 7 அடி மிக மோசமானதாக இருக்கும். அது அடிக்காவிட்டாலும், கொஞ்சம் தாழப் பறந்தாலே காதுசவ்வுகளை பிரித்து இரத்தம் வடியும். அடித்த இடத்தில் கிணறுகள் உருவாகும். அப்படி ஒருநாள் எவ் 7 அடிக்கும்போது பங்கருக்குள் விழ ஓடிவந்த என் நண்பன், பங்கர் வாசலிலேயே குண்டுபட்டு முண்டமானான். என் கண்ணால் பார்த்தேன், அவனின் தலையற்ற முண்டம் அங்கும் இங்கும் ஓடித்திரிந்து பொத்தென்று நிலத்தில் விழுந்தது. ஆனால் அந்தக் கட்டத்தில் நான் குண்டுச்சத்தங்களுக்கு நன்றாகவே பழகிவிட்டேன். பயப்படுவதில்லை. சாவு எப்பவும் வரும். வரட்டுமே என்ற மனநிலையை நானும், நீயும் படித்த பள்ளிக்கூட வாழ்க்கையே தந்துவிட்டது.

ஆனால் நீ இதை அனுபவப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பத்திரிகையில் படித்திருப்பாய். ஈராக்கில், ஆப்கானில் செத்துப்போனவர்களுக்காக வரும் கழிவிரக்கத்தை முண்டமாகி செத்துப்போனவனின் செய்திக்கும் நீயடைந்திருப்பாய்.

விமானத் தாக்குதல் ஒருபுறம் என்றால் ஷெல் தாக்குதல் மறுபக்கம். கூவிக் கூவி வந்து விழும். அதுவும் ஆட்டிலெறி வெடிக்கும் சத்தம்...! அடிக்கிற இடத்தில் ஒருமுறை வெடிக்கும், வந்து விழுகிற இடத்தில் இன்னொருமுறை வெடிக்கும். அஞ்சிஞ்சி என்று ஒன்றும் அடிப்பாங்கள். கடைக் கட்டங்களில் மல்டிபரல் என்று ஒன்றைக் கொண்டு வந்து எங்கள் பதுங்கு குழிக்கு பக்கத்தில் நிறுத்திவிட்டு அடித்தது இராணுவம். ஒரே நேரத்தில் 40 ஷெல் வந்து சம அளவான மீ்ற்றர்களின் இடைவெளியில் விழுந்து வெடிக்கும். குறித்த சதுரப் பரப்பளவில் புல், பூண்டு எதையும் விடாதளவுக்கு கிளியர் பண்ணிவிடும். இப்பிடியொரு மல்டி பரல் தாக்குதலுக்குள் தான் நம்மோடு படித்த சாரங்கனின் குடும்பம் சி்க்கியது. ஷெல் தாக்குதல் முடிய தசைத்துண்டங்கள் மட்டுமே மிஞ்சின.

சாரங்கன் தசைத்துண்டாகிக் கொண்டிருக்கையில் நீ உன் வீட்டில் இலங்கை- இந்திய அணிகள் மோதும் விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டும், இலங்கை அணி வெல்ல வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருந்திருப்பாய். உன் வாயின் சுவாரஸ்யம் குன்றிப்போய்விடால் இருப்பதற்காக உன் அம்மா சிற்றுண்டிகளை தந்துகொண்டேயிருந்திருப்பார். சமநேரத்தில் நான் நீண்ட வரிசையில் கஞ்சிக்காக காத்துக்கொண்டிருந்தேன் என்பது உனக்குத் தெரியுமா?

நானறிந்த வரையில் அதிக காலங்கள் கதிரையில் இருந்தோ, ரியுசனுக்கு சென்றோ படித்ததில்லை. மரத்துக்கு கீழே, ஆட்டிலெறி ஷெல்லின் எம்டி கவரை நிறுத்திவைத்து அதன் மேலிருந்தே படித்தேன். எங்கள் பள்ளிக்கூடத்தின் பாடவேளை மணி, அலங்கார வளைவுகள் என அனைத்துமே ஆட்டிலெறி ஷெல்லின் எம்டி கவரினால் ஆக்கப்பட்டவைதான். ஆனால் நீ எப்படியெல்லாம் படித்திருப்பாய் என்று உனக்கு நான் நினைவுபடுத்தத் தேவையில்லை. எங்களுக்கு ஆங்கிலத்துக்கு ஆசிரியரே இருக்கவில்லை. பல பாடசாலைகளுக்கும் பறந்து பறந்து கற்பிக்கும் கணித ஆசிரியர் ஒருவர் மட்டுமே இருந்தார். விஞ்ஞானமும் அப்படித்தான். ஆனால் நாங்கள் கிடைத்ததைக் கொண்டு ஆழமாகக் கற்றுத் தேறினோம். எல்லா நாட்களும் போராட்டத்தோடு தொடங்கி, போராட்டத்தோடு முடிந்ததனால், எதிலிருந்தும் பின்வாங்கிக் கொள்ளுதல், தந்திரமாக அடுத்தவனை இழுத்து விழுத்தி ஏறிக்கொள்ளல், வெட்கமேயின்றி நாக்கு புரட்டுதல் என எந்த நல்ல பழக்கமும் எங்களைத் தொற்றிக் கொள்ளவில்லை. அப்படியொரு பழக்கமிருப்பதை ரணில் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதைச் சொல்கிறேன் கேள் நண்பா.

இப்படியேதான் என் விவரமறிந்த காலம் வளர்ந்தது. அப்போதுதான் எங்களுக்கு சமாதானத்தை அறிமுகம் செய்துவைத்தார் ரணில். போரற்ற காலம் அப்படித்தான் இருக்கும் என்பதை பார்க்கவே வியப்பாக இருந்தது. பூமிக்கு வந்த சிசு அனுபவிக்கும் முதல் மழை சத்தத்தைப் போல சமாதானத்தை கூர்மையாகப் பார்த்தோம். சமாதானம் வந்து 1 வருடத்துக்குள் அனுபமாகவும், வாசிப்பின் ஊடாகவும் நாங்கள் பெற்றிருந்த அறிவின்படி தெளிவான ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம். நான் அப்போது உயர்தரம் கற்றுக்கொண்டிருந்தபடியால் தீவிரமான விவாதங்கள் நடக்கும். பத்திரிகைகளை எடுத்துவைத்துக் கொண்டு எல்லா எழுத்து மாயைகளையும் கொத்திக் குதறிவிடுவோம். புலிகளைப் பற்றி வசனங்களில் தெரிந்து வைத்திருக்கும் அரசியல் ஆய்வாளர்கள், அவர்களின் படைவலுச் சமநிலை குறித்து வாராந்தம் ஆய்வுகள் எழுதித் தள்ளுவதைப் படித்தபோதுதான், இந்த ஆய்வுச் சூழல் நம்மை எப்படி அழித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். இதெல்லாம் நடந்துகொண்டிருக்கையில் புலிகளிடமிருந்து கருணா பிரிந்துபோனார். மனித நடத்தையில் இப்படியும் ஒரு பண்பிருப்பதை அவர் எங்களுக்கு கற்பித்தார்.

அத்துடன் நிலமை மாறியது. போர் சத்தத்துக்குள்ளும் சுகமாக வாழ்ந்த நாம் இந்த சமாதான காலத்தில் துண்டுதுண்டாக ஆனோம். போட்டி, பொறாமை, வஞ்சகம் என அனைத்தும் எங்களைப் பிரித்துப் போட்டன. இதையெல்லாம் யார் செய்தது. ரணில்தானே. எனவே அவரை மாற்றவேண்டும். எல்லோரும் முடிவெடுத்தார்கள். ராஜபக்ச வந்தார். போர் மூண்டது. இதுவரையான போர் அனுபவங்களின்படி எங்களை ஆட்சி செய்த புலிகளும் அதீத நம்பிக்கையில் போரில் இறங்கினார்கள். எங்கள் நட்பு வட்டாரத்துக்குள் இருந்த பலரும் கல்வியை நிறுத்தி ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொண்டார்கள். நானும், இன்னும் சிலரும் படித்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிவிட்டோம்.
போர் உக்கிரம்பெற்றது. கூடவே படித்த நிறஞ்சன் மரணித்தான். கலியுகவரதனின் கழுத்தை இராணுவம் சுற்றி நின்று வெட்டியதை வீடியோவாக வெளியிட்டன ஊடகங்கள். அனைத்தையும் பார்த்துப் பார்த்து பல்கலைக்கழக விடுதியில் பைத்தியமாக சில காலம் நான் அலைந்தேன் நண்பா.

அதற்குப் பின்னர் நடந்தவைகள் உனக்குத் தெரியும். போரில் உன் அண்ணா என்று நீ பாசத்தோடு சொல்லும் என் அண்ணா காணாமல் போனான். இன்று வரைக்கும் அம்மா தேடிக் கொண்டுதான் இருக்கிறார். கொழும்புப் பக்கம் எங்காவது கண்டால் கதை. பேசு. நாகரிகமில்லாதவன் போல அலையிறானே என்று மதிக்காமல் சென்றுவிடாதே.

இவ்வளவும் நான் ஏன் உனக்கு எழுதுகிறேன் என்று நீ நினைக்கக்கூடும். காரணம் உண்டு. அனைத்தும் நீ இந்தத் தேர்தல் தொடர்பில் எழுதியவைகள்தான் காரணம். என் நீள் மௌனத்தை உடைத்துவிட்டது.
மாற்றம் மாற்றம் என்று எழுதினாய். ஜனநாயகக் கடமையென்று கூக்குரலிட்டாய். வாக்களிக்காதவனை சோம்பேறி என்றாய். உன் பார்வையிலும், நீ வாழும் சூழலிலும் மாற்றம் அவசியப்படுகிறது. நீ எழுதும் இந்த ஜனநாயகம், மாற்றம் எல்லாம் எப்படியிருக்கும் என்று ஏற்கனவே அறிந்தவர்கள், அனுபவித்தவர்கள் நாம். மாற்றம் யாருக்குத் தேவையெனில் மத்தியதர வர்க்கத்தினருக்குத்தான். நடந்திருக்கும் மாற்றம் உன் குடும்பத்துக்குத்தான் லாபம் தரப்போகிறது. மகிந்த குடும்பம் எல்லா சொத்துக்களையும் குடும்பமயப்படுத்திவருவதனால், கொழும்பில் இருக்கின்ற உன் பரம்பரைச் சொத்தையும் பிடுங்கிவிடுவாரோ என்ற அச்சத்தில்தான் மாற்றம் கோரினாய். இப்போது நடந்திருக்கும் மாற்றம் உனக்கும் உன் அப்பாவுக்கும் செல்வத்தை அள்ளி வழங்கும். உங்கள் வணிகம் அமெரிக்கா, ஐரோப்பா தாண்டி செழிக்கும்.

இராணுவம் பிடுங்கிக் கொண்ட 10 ஏக்கர் நிலம்போக 2 ஏக்கர் நிலத்தில் மழையை நம்பி விவசாயம் செய்யும் என் அப்பனுக்கு இந்த மாற்றம் என்ன தரப்போகின்றது. ஏற்கனவே அந்த நிலத்தையும் தா, கடன் தருகிறேன் என்று ஒவ்வொருநாளும் படலையைத் தட்டுகிறது வங்கி. எல்லார் வீடுகளிலும் போல என் வீட்டிலும் ஒரு துண்டு நகையில்லை. அனைத்தையும் லீசிங் கம்பனிக்கும், வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டிக்கும் கொடுத்தாயிற்று. ரணில் கொண்டு வந்திருக்கும் இந்த மாற்றத்தோடு என்னவெல்லாம் இனி அறிமுகமாகும், அது எப்படியான ஆசைகளை அவிழ்த்துவிடும் என்று என்னவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆகவே அப்பன் இருக்கின்ற நிலத்தையும் விற்றுத்தான் இந்த ஐந்துவருடத்தையும் கடக்கப்போகிறான். அதன்பின்னர்?

ஆனாலும் நாங்கள் ஓர் ஓர்மத்தோடு வாழப் பழகியவர்கள். அதைத் தேர்தலில் வெளிப்படுத்தினோம். எங்கள் நிராகரிப்பால் வந்தவர், எங்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார். எங்களுக்கு இப்போது கிடைத்த ஆயுதம் அதுமட்டும்தான் நண்பா. திருப்பி அடிக்க எங்களிடம் பழைய இரும்பு கூட இப்போதில்லை. அதைக்கூட விற்றுத்தான் என் சனம் வயிறுபிழைக்கிறார்கள். நீ வேண்டிய மாற்றத்தின் தொடக்கம் இப்படித்தான் இருக்கிறது.

இனி என்ன செய்யப் போகிறோம்? என்னிடம் பதிலில்லை. தயவுசெய்து நீயே பதில் எழுது.

இப்படிக்கு 
என்றும் மறவாத
உயிர் நண்பன்
நான்.