Breaking News

வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் இராணுவ அதிகாரிகள்! பிரசாந்த ஜெயக்கொடி

வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அதுபற்றிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால் அதில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் இலங்கையின் காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

அவுஸ்ரேலியாவில் இருந்து நேற்று நாடு திரும்பிய அவர், கலதாரி விடுதியில் ஊடகவியலாளர்களைச சந்தித்து கருத்து தெரிவிக்கும்தோதே இதணைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

 வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் கொலைகளின் பின்னணியில் சில இராணுவ அதிகாரிகளே இருந்தனர். இந்தக் குற்றங்களில் காவல்துறை தொடர்புபட்டிருக்கவில்லை. முன்னைய அரசாங்கம் தமது சட்டவிரோத காரியங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்ற ஒரு விளையாட்டுப் பொருளாகவே பயன்படுத்த முனைந்தது. அதற்கு நான் உடன்பட மறுத்த போது என்னைப் பழிவாங்க முனைந்தனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச என்னை பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து, தமது சட்டவிரோத உத்தரவுகளைச் செயற்படுத்தாமல் நியாயமான கடமைகளா ஆற்ற நினைத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அச்சுறுத்தினார்.

என்னையும் எனது குடும்பத்தினரையும் கொலை செய்யப் போவதாக பல தொலைபேசி அழைப்புகளின் மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அதுகுறித்து விசாரித்த போது, அவை பாதுகாப்புச் செயலரிடம் இருந்தே வந்தன என்பதை கண்டறிந்தேன்.” என்றும் அவர் கூறினார்.

எனினும், பிரசாந்த ஜெயக்கொடியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று நிராகரித்துள்ளார் கோத்தாபய ராஜபக்ச. பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறை திணைக்களத்தில் இருந்து வெளியேறி விட்ட அவர், ஒருவேளை மீண்டும் அதில் இணைய விரும்பலாம். எவ்வாறாயினும், இது தற்போது நடந்து வரும் எமது பெயரைக் கெடுக்கும் பரப்புரையின் ஒரு பகுதியாகும்.என்று அவர் தெரிவித்துள்ளார்.