Breaking News

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையில் மாற்றமில்லை - பான் கீ மூன்

இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு கட்டாயமாக தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என அவர் கருதுவதாக பான் கீ மூனின் ஊடக பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற ஐ.நா சபையின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கம் உள்ளகப் பொறிமுறைமை ஒன்றின் மூலம் மீள் விசாரணைகளை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தர நிர்ணயங்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த முறையில் நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டியது இலங்கையின் முக்கிய கடமையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.உலகின் ஏனைய நாடுகளில் நடைபெற்ற யுத்தத்தின் பின்னர் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் பொறுப்பு கூறல்களின் ஊடாக நிலையான சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் எனவும் இலங்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காண தான் பூரண ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் ஐ.நா அமைப்பின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்ள சமரவீர இன்று ஐ.நா பொது செயலாளரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.