Breaking News

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமையில் முன்னேற்றமாம் – சொல்கிறார் சமந்தா பவர்

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு நியுயோர்க்கில் நேற்று இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவாசமும் இந்தச் சந்திப்பில், கலந்து கொண்டார்.

இந்தச் சந்திப்புக் குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், மங்கள சமரவீரவுடனான சந்திப்பு ஊக்கமளிப்பதாகவும், ஜனவரி மாதம் நடந்த தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அமெரிக்க அதிகாரிகளில் சமந்தா பவர் முக்கியமானவர்.அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கமானவரான இவர், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.