நொதேர்ண் பவர் நிறுவனம் தனது மின்பிறப்பாக்கிகளை இயக்க தொடர்ந்தும் தடை!
சுன்னாகம் கழிவு ஓயில் குடிநீர் விவகாரம் தொடர்பினில் மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் மீண்டும் நொதேர்ண் பவர் நிறுவனம் சார்பில் தோன்றிய சட்டத்தரணிகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் மூடப்பட்ட குறித்த நிறுவனத்தினை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச அமைப்பாளருமான மணிவண்ணன் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த விண்ணப்பத்தினை மீண்டும் நிராகரித்ததுடன் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வழக்கேட்டினை மேல் நீதி மன்றில் பாரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி அனைத்து தரப்புக்களினையும் வளைத்துப்போட நொதேர்ண் பவர் நிறுவனம் முற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








