Breaking News

இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகளின் விவரங்களை தருமாறு கோரிக்கை

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் இலங்கைக்கு திரும்பி வரவிரும்புகின்ற அகதிகள் பற்றிய விவரங்களை தருமாறு இந்திய தலைவர்களிடம் இலங்கை அரசு கோரியுள்ளது. 

பல ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்தாலும் எல்லோரும் திரும்பி வரவிரும்பமாட்டார்கள் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். 'இலங்கைக்கு திரும்ப விரும்புவோரின் விவரங்களை கேட்டோம். இந்தியாவில் நிரந்தரமாக குடியேறிய இலங்கை அகதிகளும் உள்ளனர். 

அவர்கள் திரும்பி வர விரும்பவில்லை. திரும்பி வர விரும்புவோரும் உள்ளனர்' என அவர் குறிப்பிட்டார். கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால புதுடில்லிக்கு சென்றார். அவர் தலைமையிலான குழுவில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் இருந்தார். அவர், மீள் குடியேற்றம் தொடர்பில் புதிய அரசு கண்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இந்திய தலைவர்களுக்கு விளக்கினார். 'வடக்கில் மீள்குடியேற்றத்துக்கான 1000 ஏக்கர் காணியை விடுவித்துள்ளோம். பல நிறுவனங்களும் மீள்குடியமர்த்தலுக்கு முன்வந்துள்ளன' என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். அதியுயர் பாதுகாப்பு வலய அளவை குறைத்து.இந்த நிலங்களை விடுவிப்பது தொடர்பில் அரசு ஒரு அமைச்சரவை தீர்மானம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.