Breaking News

வடக்கிலுள்ள பாதுகாப்பு வலயங்களோ, படை முகாம்களோ அகற்றப்பட மாட்டாது - ருவன் விஜேவர்தன

வடக்கிலுள்ள பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் என்பன எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்களை அகற்றாமலேயே இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும் என்றும், அங்குள்ள இராணுவ முகாம்களும் அகற்றப்படும் எனவும் ஜனாதிபதி தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பின்னரும் பல்வேறு தரப்பினரால் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

எவ்வாறாயினும் அந்த தகவல்களில் துளியேனும் உண்மையில்லை. வடக்கிலுள்ள இராணுவ முகாம்களோ அல்லது பாதுகாப்பு வலயங்களோ அகற்றப்பட மாட்டாது.


மீள்குடியேற்றத்துக்கு தடையாக இருப்பதாக பாதுகாப்பு வலயங்களையும், இராணுவ முகாம்களையும் சுட்டிக்காட்டுகின்றனர். இருந்த போதிலும் அவற்றை அங்கிருந்து அகற்றாமலேயே இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற முடியும் என்றார்.

இதேவேளை வலி.வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள 1000 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 3 வாரங்களில் மீளப்பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.