Breaking News

சொந்த நிலங்களையே தவிர மாதிரி கிராமங்களை தமிழர்கள் கேட்கவில்லை - சுரேஷ்

யாழ்.வலி,வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 25வருடங்களாக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள் குடியேற்றுங்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமா ன சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

வலி,வடக்கு மக்களை மீள்குடியேற்றுவதற்காக 220 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு விடுத்த அறிவித்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

வலி,கிழக்கு மக்களின் காணிகளை பறித்து வலி, வடக்கு மக்களுக்கு கொடுத்து தமிழர்களுக்கு மீள்குடியேற்றம் கொடுத்துவிட்டோம் என நாடகம் ஆடவேண்டாம். தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலங்களையே கேட்கின்றார்கள். மற்றய மக்களுடைய காணிகi ள பறித்து அந்த காணிகளில் மீள்குடியேற்ற மாதிரிக் கிராமங்களை ஒருபோதும் கேட்கவில்லை. இதனையே முன்னை மஹிந்த ஆட்சியிலும் செய்தார்கள். அதனையே மைத்திரி ஆட்சியிலும் செய்யவேண்டாம். அவ்வாறு செய்தால் அதனை நாங்கள் நிச்சயமாக எதிர்க்கவேண்டிவரும்.

நேற்று முன்தினம் மீள்குடியேற்ற அமைச்சர் கூறியிருக்கின்றார் உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்காக 1000 ஏக்கர் நிலத்தில் 220ஏக்கர் நிலத்தை விடுவிக்கப்போவதாக. ஆனால் அந்த 220ஏக்கர் நிலம் எங்கிருக்கின்றதென்றால் வலி,கிழக்கில் வளலாய் கிராமத்தில் உள்ளது.

இந்தப் பகுதியிலிருந்து வலி,வடக்கு மக்களுடைன் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் அவர்களுடைய சொந்த நிலத்திற்கு திரும்பவில்லை. இந்நிலையில் அவர்களை மீள்குடியேற்றாமல். அவர்க ளுடைய நிலத்தை பறித்து வலி,வடக்கு மக்களை குடியேற்றி அந்தப் பகுதியில் மீள்குடியேற்ற மாதிரிக் கிராமம் ஒன்றை உருவாக்க நினைக்கின்றார்கள்.

இதனையே முன்னை மஹிந்த ஆட்சியிலும் படையினரின் ஆலோசனையுடன் குறித்த திட்டம் நi டமுறைக்கு வந்திருந்தது. இப்போது வந்துள்ளவர்களும் அதனையே எடுத்துக்கொள்கின்றார்கள். எனவே இது தமிழ்மக்களுக்கு நாங்கள் மீள்குடியேற்றத்தை கொடுத்துவிட்டோம். என காண்பிப்பதற்கான ஒரு நாடகம் ஆகவே நாங்கள் பார்க்கவேண்டியிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இந்தியாவிற்கு பயணமாகவுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு அவர்கள் கோரிய மீள்குடியேற்றத்தை கொடுத்திருக்கின்றோம். என காண்பிப்பதற்கே இந்த நாடகம் மேற்கொள்ளப்படுகின்றது. இன்று இவர்கள் மேற்கொள்ளும் திட்டத்தை முன்னை ஆட்சியில் முன்னெடுத்தபோது நாங்கள் அதனை எதிர்த்தோம். அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். எனவே அது இந்த ஆட்சியிலும் தொடர்ந்தால் அதற்கு எதிராக வும் நாங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி எதிர்ப்போம் என்பதுடன் சர்வதேசத்தின் கவனத்திற்கும் இந்த விடயத்தை நாங்கள் கொண்டுவருவோம்.

இதேபோன்று வடக்கில் முதலமைச்சர் இருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். எனவே அவர்களுடன் பேசியே மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். எமக்கு தெரியாமல் மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் குடியேற்றாமல் அவர்களை மாற்றிடங்களில் படையினரின் ஆலோசனைக்கு அமைய மீள்குடியேற்ற அமைச்சர் மீள்குடியேற்றுவாராக இருந்தால். அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் - என்றார்.