Breaking News

போர்க்குற்ற விசாரணை அறிக்கையினை மார்ச்சில் சமர்ப்பிக்க கோரி யாழில் கவனயீர்பு போராட்டம்

ஐநா. விசாரணை அறிக்கையினை வெளியிடும் காலத்தை தாழ்த்தவும், உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் வரும் 24ம் திகதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்த யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று யாழ்.பல்கலைக்கழககத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை ஆசியரியர் சங்கத்தின் தலைவர் அ.இராசகுமார் தெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில்


தமிழர் தாயகத்தில் நடைபெற்றது திட்டமிட்ட இன அழிப்பே என்பதை தமிழ் சமூகம் கோரியதன் அடிப்படையில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகம் சர்வதேச விசாரணையினை கோரியிருந்தது. இதற்கமைய குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகவும் உள்ளது.

இந்நிலையில் குறித்த அறிக்கையினை குறித்த காலத்தில் வெளியிடாமல் உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் ஐ.நா ஆணையக விசாரணை அறிக்கை வெளியாகும் காலத்தை தாழ்த்தவும் புதிய அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இதனை எதிர்த்து நாம் எதிர்வரும் 24ம் தியதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம் .காலத்திற்கு காலம் இன அழிப்பின் பரிமாணங்களை உணர்ந்தவர்கள் நாங்கள். எனவே எமக்கு நியாயம் வேண்டும். அதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையினைக் கோரியிருக்கின்றோம்.

அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ள அறிக்கையினை, காலம் தாழ்த்தி வெளியிடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் எதிர்வரும் 24ம் திகதி குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கின்றோம். அதற்கு சகல அரசியல் தரப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

அதேவேளை இந்த சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தமது முழுமையான ஆதரவினை வழங்கியதோடு கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.